Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 தாக்கல் தேதி நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து 8வது ஊதியக் குழுவின் அறிவிப்பை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்த அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பலனடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை அதிகரிப்பதற்கான, சம்பள ஆணையத்தை அமைப்பது அவசியம் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், 8வது ஊதியக்குழு 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன், நிதி அமைச்சகம் பல்வேறு துறைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை பெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் தொழிற்சங்க பிரதிநிதிகள் நிதி அமைச்சரை சந்தித்து 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தேசிய செயலாளர் ஸ்வதேஷ் தேவ் ராய் இது குறித்து கூறுகையில், 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது புதிய ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
8வது சம்பள கமிஷன் 2026ம் ஆண்டில் அமல்படுத்தப்படலாம்
7வது ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதால், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 முதல் அமல்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. முந்தைய சில ஊதிய கமிஷன்களின் பரிந்துரைகள் 10 வருட இடைவெளியில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், புதிய ஊதியக் கமிஷன் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என்று ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை
2025-26 பட்ஜெட்டில் EPFO ஓய்வூதியத்தை மாதத்திற்கு ₹5,000 ஆக உயர்த்துவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது, வருமான வரி விலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பிஎம்எஸ்) வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் பவன் குமார், இபிஎஸ்-95 ஓய்வூதியத்தை VDA (Variable Dearness Allowance) உடன் இணைத்து ஓய்வூதிய வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். இது தவிர, கிக் (Gig)தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம், விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் மற்றும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 7வது ஊதியக் குழு பிப்ரவரி 2014 காலகட்டத்தில் அமலுக்கு வந்தது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 2016ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு 2026ம் ஆண்டுக்குள் புதிய ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உரிய நேரத்தில் ஆரம்பிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. வரவிருக்கும் பட்ஜெட்டில் இந்த கோரிக்கைகள் குறித்து நிதியமைச்சர் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ