ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்...!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ஏற்கெனவே அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஒடிசா மாநில செஞ்சுரியன் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
இன்று நடைபெறும் விழாவில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். புவனேசுவரத்தில் உள்ள செஞ்சூரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் பழங்குடியினர் மற்றும் திருந்திவாழும் நக்ஸலைட்டுகளுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குகிறது.
இப்பல்கலைக்கழகம் சார்பில் கமலஹாசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு, கமலஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். முன்னதாக, ராஜ்கமல் வண்ணத்து பூச்சி தோட்டத்துக்கு கமலஹாசன் சென்றார். அங்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் பயிற்சி விவரத்தை கேட்டறிந்தார்
இந்நிலையில், நேற்று ஒடிசா மாநிலம் சென்ற கமல்ஹாசன் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மிகப் பெரும் பின்னணியைக் கொண்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறினார்.