சென்னை: 19 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்க கூடாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜூலை மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக கர்நாடகா அரசு பரிந்துரைக் குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு விவாதிக்கக்கூடாது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது. நிபுணர் குழுவின் இந்த நடவடிக்கை, காவேரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது.
கர்நாடக அரசின் மேகதாது திட்ட பரிந்துரைக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு பலமுறை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட காவேரி ஆறு பாயும் மாநிலங்களில் கர்நாடகா அரசு உரிய அனுமதியைப் பெறவில்லை.
எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் குழு, மேகதாது அணைத் திட்டம் தொடர்பான அனுமதி குறித்து பரிந்துரை செய்ய கர்நாடக அரசுக்கு அழைப்புவிடுத்ததை திரும்பப் பெற வலியுறுத்தவேண்டும். இந்த விவகாரத்தில் உடனடி பதிலை எதிர்பார்க்கிறேன்.’
இவ்வாறு முதல் அமைச்சர் கூறியுள்ளார்.