சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்று வருகிறது!
திமுக தலைவராக மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் தலைமையில் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் விழுப்புரத்தில் வரும் 15-ஆம் நாள் நடைபெறவுள்ள திமுக-வின் முப்பெரும் விழா குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#TamilNadu: DMK President MK Stalin at a meeting of party's district secretaries, MLAs and MPs, in Chennai. pic.twitter.com/Ndo0VHIFeO
— ANI (@ANI) September 8, 2018
கடந்த செப்டம்பர் 5-ஆம் நாள் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சமாதியை நோக்கி மு.க அழகிரி அமைதி பேரணி நடத்தினார். மேலும் இந்த "பேரணியில் பங்கேற்ற 1.5 லட்சம் பேர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?" என மறைமுகமாக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் யாரும் முக அழகிரி அவர்களின் பேரணியில் பங்கேற்றனரா? என முக ஸ்டாலின் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் யாரேனும் இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றது தெரிய வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.