தொகுதி மறுவரையறை பணிகளை செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது: திமுக மனு

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை இன்னும் முழுமையடையாத நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 28, 2019, 07:31 PM IST
தொகுதி மறுவரையறை பணிகளை செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது: திமுக மனு title=

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனேகமாக அடுத்த மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வந்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை கோரி மனு ஒன்றை திமுக தாக்கல் செய்துள்ளது.

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை இன்னும் முழுமையடையாத நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்றும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை உடனடியாக நிறைவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த பணிகளை நிறைவு செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 

உள்ளாட்சி தேர்தல்: 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என்ன நடந்தது..?

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருந்தது. இந்த தேர்தலில் ST பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப் படவில்லை என கூறி இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும் சட்டவிதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இந்த உத்தரிவினை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் விசாரித்து உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவினை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு பின்னரும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனையடுத்து திமுக சார்பில் RS பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, M சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் நடைப்பெற்று வருகின்றது. இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், “உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?” என்று நீதிபதிகள் கேட்டதற்கு “தொகுதி வரையறை பணி முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்” என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து விசாரணையை தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஜூலை 31 அன்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் ஆக., 6-ஆம் நாள் உள்ளாட்சி தேர்தலுக்கான வரையறை தாக்கல் செய்யுமாறு தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தது.

இதனையடுத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது., விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தலுக்கான 'வார்டுகள் வரையறை செய்யப்பட்டு வரும் ஆக., 31-ல் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும், அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுகொண்டது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே காலதாமதம் செய்வதாகவும், எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வக்கீல் ஜெயசுசிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மன், “உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சில பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. எனவே மேலும் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது” என கோரிக்கை விடுத்தார்.

ஆனால் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஏற்கனவே நீங்கள் ஒரு மாத கால அவகாசம் வாங்கி விட்டீர்கள் என எச்சரித்தது. அதன்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி வாதாடுகையில், “தொகுதி வரையறை இன்னமும் முடியவில்லை. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்காக வேண்டும் என்றே மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதுபற்றி மாநில தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் விசாரித்தனர். அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வக்கீல், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன. திட்டமிட்டபடி தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த தகவலை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இதையடுத்து டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. 

உள்ளாட்சி தேர்தல் எப்படி நடைபெறும்? எத்தனை கட்டங்களாக நடைபெறும்? என்பன போன்ற விவரங்கள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும்போது தெரியவரும்.

Trending News