காவிரி (Kaveri River) பாசன மாவட்டங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான காவிரி & கோதாவரி (Godavari River) இணைப்புத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மிக முக்கிய பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் காட்டப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையிலான காவிரி நீர்ப்பகிர்வு சிக்கல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டிலிருந்தே 100 அடிக்கும் கூடுதலாக இருந்ததாலும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. காவிரி நீர்ப்பகிர்வு சிக்கலின்றி நடப்பதை உறுதி செய்ய உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், கர்நாடக அணைகள் நிரம்பவில்லை என்றால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்பது உறுதி.
ALSO READ | காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: PMK
காவிரி பாசன மாவட்டங்களில் எந்தத் தடையும் இல்லாமல் முப்போகம் விளைந்த செழிப்பான காலம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது மட்டும் தான் தீர்வு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் 3000 டிஎம்சி தண்ணீர் ஓடுகிறது. அவற்றில் 1,100 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில் 1000 டிஎம்சி நீரை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வழியாக காவிரியில் இணைப்பது தான் இந்தத் திட்டமாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். காவிரி பாசன மாவட்டங்களில் கவலையின்றி விவசாயம் நடப்பதை உறுதி செய்ய இந்தத் தண்ணீர் போதுமானதாகும். அதனால் தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட திட்டம் தான் என்றாலும் கூட, அதை செயல்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது 2018&ஆம் ஆண்டில் தான். அப்போது மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த நிதின்கட்கரி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தைப் பார்த்த போது, நடப்பாண்டில் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் திட்டம் நடைமுறைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இத்திட்டம் குறித்து பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்பதும், மத்திய அரசின் (Central Government) உயர்மட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படுவதில்லை என்பதும் மிகவும் கவலையளிக்கின்றன. காவிரி & கோதாவரி இணைப்புக்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை ஓராண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தின் பயனாளிகளான மராட்டியம், சத்தீஸ்கர், ஒதிஷா, தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டால், அதை இறுதி செய்து, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். ஆனால், ஓராண்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நகர்வும் இல்லை.
காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார். தமிழக அரசிடமும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. காவிரி - கோதாவரி இணைப்பின் முதல் கட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் சந்தித்து பேச தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து விட்டதால், அந்த பேச்சுவார்த்தையை நடத்த முடியவில்லை.
காவிரி & கோதாவரி இணைப்பு எனும் கனவுத்திட்டத்தை செயல்படுத்த ரூ.60,000 கோடி செலவாகும் என்று இரு ஆண்டுகளுக்கு முன் மதிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தவறினால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து விடும். அதன்பின்னர் அத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றதாகி, இது நனவாகாத கனவுத் திட்டமாகவே வரலாற்றில் இடம்பெற்று விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது. காவிரி & கோதாவரி திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ALSO READ | தமிழ்நாட்டின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க காவிரி ஆணையத்தை உடனே கூட்டுக: வைகோ
அதற்கான நடவடிக்கைகளின் முதல்கட்டமாக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மராட்டியம், சத்தீஸ்கர், ஒதிஷா, தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த மாநாட்டில் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தக்கட்ட பணிகளை நோக்கி நகர வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள்ளாகவாவது காவிரி & கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR