ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலம் பாதிப்பு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த ஆண்டே டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது தொகுதியான ஆர்கே நகருக்கு நாளை இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோ தொடர்பாக முதல்முறையாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவை அவர் தேர்தல் நேரத்தில் வெளியிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களான தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வெற்றிவேலின் இந்த செயல் கீழ்த்தரமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டு வெற்றிவேல் துரோகம் செய்து விட்டார் என இளவரசி மகள் கிருஷ்ணபிரியா கூறி உள்ளார்.
இது குறித்து கிருஷ்ணபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலாவுக்கு தெரியாமல் இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ கொடுத்தது நாங்கள் தான். கொடுக்க சொன்னது சசிகலாதான். விசாரணை ஆணையத்தில் சமர்பிக்க டிடிவி தினகரனிடம் கொடுக்கபட்ட வீடியோ. இது வெற்றிவேல் கையில் வந்தது எப்படி. வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.
கொலைபழி வந்தபோது கூட இந்த வீடியோவை சசிகலா வெளியிடவில்லை. ஜெயலலிதா சொன்னதால்தான் சசிகலா வீடியோவை எடுத்தார். முன்பே வீடியோவை வெளியிடும்படி ஊடகத்தினர் கேட்ட போது கூட சசிகலா மறுத்தார் டிடிவியிடம் கொடுக்கப்பட்ட வீடியோ வெற்றிவேலிடம் ஏன் சென்றது எப்படி சென்றது இதற்கான விடைதெரியவில்லை. சசிகலா அனுமதி இல்லாமல் இது வெளியிடப்பட்டு உள்ளது. வெற்றிவேல் மீது தினகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்து கொண்டார்.