MNM Mahendran-ஐ விடாமல் தொடர்கிறதா திமுக? காரணம் இதுதானா?

மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு விலகிய மகேந்திரனை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக, திமுக என இரு கட்சிகளுமே முயற்சி செய்தன. கட்சியிலும், மக்களிடமும் மகேந்திரனுக்கு உள்ள செல்வாக்கே இதற்கு முக்கிய காரணமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 11:36 AM IST
  • மநீம மகேந்திரன் விரைவில் திமுக-வில் இணைய உள்ளார்.
  • பிற கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வருபவர்களுக்கு திமுக முக்கிய பொறுப்புகளை அளித்து வருகின்றது.
  • மகேந்திரனுக்கும் முக்கிய பொறுப்புகள் காத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
MNM Mahendran-ஐ விடாமல் தொடர்கிறதா திமுக? காரணம் இதுதானா?  title=

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய கட்சிகளில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒன்றாகும். 

பலதரப்பட்ட, பல துறைகளைச் சார்ந்த நபர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு கமல்ஹாசன் பிரச்சாரம் என்னவோ நன்றாகத்தான் செய்தார், ஆனால், அதற்கு பலன்தான் கிடைக்காமல் போனது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மக்கள் நீதி மய்யம் கடும் தோல்வியை எதிர்கொண்டது.

இந்த தோல்விக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல முக்கிய புள்ளிகள் கட்சியை விட்டு விலகிச் சென்றனர். இதை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன் துரோகிகளுக்கு கட்சியில் இடமில்லை என்று சாடினார்.

இந்த நிலையில், ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன், திமுகவில் இணையவுள்ளதாக பல நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் திமுக-வில் எப்போது சேரப்போகிறார், அவருக்கு ஏதாவது தனி பொறுப்பு அளிக்கப்படுமா என பல கேள்விகள் நிலவி வருகின்றன.

ஏற்கனவே அதிமுக, அமமுக என சில கட்சிகளிலிருந்து பலர் திமுக பக்கம் தாவுவது கடந்த சில நாட்களாக நடந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், ம.நீ.ம கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த மகேந்திரன் திமுக-வுடன் இணைந்தால், அக்கட்சியின் பலர் அவரை பின்தொடரக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்பார்த்த அளவு வாக்குகளையும், இடங்களையும் பெறவில்லை என்றாலும், அக்கட்சிக்கு, சென்னை, கோவை போன்ற சில இடங்களில் சற்று அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் ஏமாற்றமே மிஞ்சியது. 

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை பகுதியில் அதிக வாக்குகள் கிடைப்பதற்கு மகேந்திரனும் ஒரு காரணமாக இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், கமல்ஹாசன் தேர்தல் பணிகளை கையாண்ட விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், மற்றவர்களது கருத்துகளை ஏற்கும் குணமும் கமலிடம் இல்லை என்றும் குற்றம் சாட்டிய மகேந்திரன் கட்சியை விட்டு விலகினார். 

மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சியை விட்டு விலகிய மகேந்திரனை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக, திமுக என இரு கட்சிகளுமே முயற்சி செய்தன. கட்சியிலும், மக்களிடமும் மகேந்திரனுக்கு உள்ள செல்வாக்கே இதற்கு முக்கிய காரணமாகும். 

ALSO READ: MNM: புதிய நிர்வாகிகள் நியமனம், தலைவர் பதவியுடன் பொதுச்செயலாளர் பதவியும் கமலுக்கே

தேர்தலில், கடும் போட்டிக்குப் பிறகு கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு சென்றது. இந்த நிலையில், மகேந்திரனை கட்சியில் சேர்த்தால், அதன் மூலம் கோவை வட்டாரத்தில் கட்சியை மேலும் பலப்படுத்தலாம் என பாஜக (BJP) திட்டமிட்டது. 

அதே நேரத்தில், கோவை பகுதியில் பலவீனமாக இருக்கும் திமுக-வும், அப்பகுதியில் தங்கள் செல்வாக்கை பலப்படுத்த அங்கு பிரபலமாக இருக்கும் மகேந்திரனை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி செய்து வந்தது. 

இதற்கிடையில், பிற கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வருபவர்களுக்கு திமுக (DMK) முக்கிய பொறுப்புகளையும் அளித்து வருகின்றது. அந்த வகையில் மகேந்திரனுக்கும் முக்கிய பொறுப்புகள் காத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், மகேந்திரனின் வருகை திமுக-வில் சிலருக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. பல ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினர்களாக பலர் இருக்க, தோல்வியுற்ற கட்சியிலிருந்து வெற்றி பெற்ற கட்சிக்குத் தாவும் ஒருவருக்கு முக்கியத்துவம் அளிப்பதா என கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. 

எனினும், மகேந்திரன் திமுக-வில் எப்போது இணையவுள்ளார்? அவருக்கு என்ன பொறுப்பு அளிக்கப்படும் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை. 

ALSO READ:துரோகிகளை களை எடுப்போம், கோழைகளை பொருட்படுத்தவேண்டாம்: கமல்ஹாசன் காட்டம்

Trending News