தமிழக அரசுசின் ஊழல் காரணமாக தொழில்கள் வெளியேறுகின்றன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Last Updated : May 6, 2017, 01:03 PM IST
தமிழக அரசுசின் ஊழல் காரணமாக தொழில்கள் வெளியேறுகின்றன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு title=

மாநில அரசில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் காரணமாக, தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில்கள் அண்டை மாநிலத்துக்கு செல்வதாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

“அ.திமு.க. அரசு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்திருக்கிறது”, என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியிருப்பது, வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ’வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல் அமைந்திருக்கிறது. கடந்த ஆறுவருட அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் உருவாக்காத காரணத்தால் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, எப்போது வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் “தேர்தல் விளம்பரத்திற்காக” அவசர அவசரமாக “வேலைவாய்ப்பு” முகாம்களை நடத்தி “நியமன ஆணை”களை அதிமுக அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்படி நியமன ஆணைகள் பெற்றவர்கள் இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் அவல நிலைமைத் தொடருகிறது. ஏன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஆர்.கே.நகர் தொகுயில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் “நியமன ஆணைகள்” பெற்றவர்களுக்கே இன்னும் வேலை கிடைக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வரவேண்டிய பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் தலைவிரித்தாடும் ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளுமே இதற்கு முக்கிய காரணங்கள். உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ரூ.4 ஆயிரம் கோடியில் சென்னையில் இரண்டாவது கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு, ஃபோர்டு நிறுவனம் குஜராத் மாநிலத்திற்குச் சென்றது. ஜப்பான் நாட்டின் இசுசு நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடியில் சென்னையில் புதிய கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்ட நிலையில், அதனைக் கைவிட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது. ரூ.2400 கோடியில் பைக் தொழிற்சாலை தொடங்கவிருந்த ஹீரோ மோட்டார் நிறுவனம், அந்தத் திட்டத்தை கைவிட்டு, ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றுவிட்டது. பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனம் சென்னையில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயார் செய்யும் திட்டத்தை கைவிட்டு ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது. இப்போது 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து வருடத்திற்கு மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் கியா மோட்டார் நிறுவனமும் ஆந்திராவிற்கு சென்று விட்டது.

கியா மோட்டார் நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்றால் திட்ட மதிப்பீட்டில் பாதித்தொகையை லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார்கள் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது. எங்கும் நிலவும் ஊழல், கமிஷனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வரும் தொழிற்சாலைகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, அதிமுக அரசில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. சுமார் 2.48 லட்சம் கோடி முதலீடு பெறப்போகிறோம் என்றுகூறி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டது அதிமுக அரசு. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகவில்லை.

ஆகவே விளம்பரத்திற்கான பேச்சுக்களை தவிர்த்துவிட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயல்படுத்த முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News