1919ல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்த பெரியார் 1925ல் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அதே ஆண்டில் சுயமரிதை இயக்கத்தைத் தொடங்கினார். 1939ல் நீதிக்கட்சி தலைவரானார். 1944ல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என மாற்றப்பட்டது. மனிதனுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அனைவரும் சமம். சமத்துவமே நம் கொள்கை என்ற கோட்பாட்டை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அவற்றில், தீண்டாமை ஒழிப்பு - சுயமரிதை - சாதி மறுப்பு திருமணம் - பெண்களுக்கு சம உரிமை - தேவதாசிகள் ஒழிப்பு - கைம்பெண்களுக்கு மறுவாழ்வு ஆகியன குறிப்பிடத்தக்கவை.
மனுதர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை தகர்த்தெறிய வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட்டவர் ; மூடநம்பிக்கையை அகற்ற பகுத்தறிவு மூலம் பாமர மக்களிடமும் முற்போக்கு சிந்தனையை முன்நிறுத்தியவர். மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக அந்நாளிலேயே குரல் கொடுத்தவர். அது மட்டுமின்றி ; அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டதற்கு அவரே மூலகாரணம்!
மேலும் படிக்க | குடும்பங்களின் வளர்ச்சியில் பெண்களுக்கான உரிமைத் தொகை
மனிதனுக்குள் ஏற்றத்தாழ்வை உருவாக்கி ; உயர்சாதி என்ற பட்டத்தைத் தனக்குத்தானே சூட்டிக்கொண்டு, மனித சமூகத்தை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை விரும்பாத பெரியார் ; சமத்துவ விதையை நாடெங்கும் தூவி சாமானிய மக்களையும் விழிப்படைய செய்தார். அக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நாடெங்கிலும் உள்ள பெரும்பாலான கோயிலுக்குள் சென்று வழிபட முடியாத சூழல் இருந்தது. அவற்றை உடைத்தெறிவதற்காக அரும்பாடுபட்டார் பெரியார். அதிலும் சென்னை மாகாணத்துடன் கேரளாவின் மலபார் தேசம் இணைந்திருந்த அக்காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்களுக்குப்பின் வைக்கம் கோயிலுக்குள் வழிபட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச்சென்று அதில் வெற்றியும் கண்டார். பெரியாரின் விடாபிடியான இப்போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திருவாங்கூர் சமஸ்தானம் வாசல் திறந்து வழிவிட்டது ; வரலாறு! அதன்பின் வைக்கம் வீரர் ; பகுத்தறிவு பகலவன் ; தந்தை பெரியார் என்கிற பட்டமும் ஈ.வே.ராமசாமியை அலங்கரிக்கத் தொடங்கின.
தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஆட்சி அரியணையில் அமர ஒருபோதும் விரும்பவில்லை. ஆளுவோர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி னார். அதற்காக எவ்வித தயக்கமும் காட்டாமல் எதிர்த்து நின்று குரல்கொடுத்தார். 1937ல் ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் கொண்டுவந்த கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்தார். அதற்காக சிறைவாசம் சென்றார். அவர் வாழ்வின் அர்ப்பணிப்பு என்பது மங்களுக்கானதாகவே அமைந்தது. சமூக நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பெரியார் என்றால் அது மிகையாகாது!. அதனால்தான் தமிழ்நாட்டு அரசியலில் தேசிய கட்சிகளால் இன்றுவரை காலூன்ற முடியவில்லை.
இது வரலாற்றின் பேருண்மையாகும்! மேலும் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர்த்து ; பிற கொள்கைகள் அனைத்தையும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் பயனாக ; மதவாதகட்சிகள் இன்றுவரை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியவில்லை. மேலும் திராவிட கட்சிகள் இங்கு நிலைத்திருப்பதற்கு தந்தை பெரியாரின் சமத்துவமிக்க கொள்கையே மூலாதாராமாகும். இன்று சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் 145- வது (17.09.2023) பிறந்தநாளாகும். அவரை இந்நன்னாளில் நினைவுகூர்வது என்பது தன்மானமுள்ள தமிழர்களின் தலையாய கடமையாகும்.
எழுத்தாக்கம் :
இரா. அமர்வண்ணன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ