திருநங்கை, திருநம்பிகளை எப்படி அழைக்க வேண்டும் ? நீதிமன்றத்தில் புதிய சொல் அகராதி சமர்ப்பிப்பு

Trans Sexuals : மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் என எத்தனையோ பெயர்களில் ஆண், பெண் போலவே இயல்பாக உள்ள பிற பாலினங்களை பொதுச்சமூகம் முதல் ஊடகம் வரை எப்படி அழைக்கிறது. தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் வாதங்கள் என்னென்ன ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 25, 2022, 09:12 PM IST
  • பாலின பாகுபாட்டால் ஏற்பாடும் சிக்கல்கள்
  • ஆண், பெண் உள்ளிட்ட பல பாலினங்களை எப்படி அழைப்பது ?
  • LGBTQIA PLUS சமூகத்தினர் சொல்லும் பரிந்துரைகள் என்னென்ன ?
திருநங்கை, திருநம்பிகளை எப்படி அழைக்க வேண்டும் ? நீதிமன்றத்தில் புதிய சொல் அகராதி சமர்ப்பிப்பு  title=

LGBTQIA PLUS சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை  குறிப்பிடுவது தொடர்பான சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி அனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊடகங்களில் LGBTQIA PLUS சமுதாயத்தினர் அளித்த சொற்களஞ்சியத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்குவது தொடர்பாக சொற் பிறப்பியல் மற்றும் அகராதி துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, முதல்வருக்கு அனுப்பி வைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும், அதற்காக நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளுபடி - எதனால் ?

அதேபோல பள்ளிக் குழந்தைகளுக்கு இப்பிரிவினர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி வழங்கப்பட்டு, அதன் விவரங்கள் அடுத்த விசாரணையின் போது அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் எனவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, LGBTQIA PLUS சமுதாயத்தினரை குறிப்பிடும் சொற்களஞ்சியத்தை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகள் இறுதி செய்ய நான்கு வார காலம் அவகாசம் விடுத்தும், விசாரணையை ஆகஸ்ட் 22 ம்  தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதேபோல, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தொழில்ரீதியிலான தவறான நடத்தை என அறிவிக்கை வெளியிடுவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே, ஊடகங்கள் பயன்படுத்த சொற்களஞ்சியத்தில் சில குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதாவது, அரசுத்தரப்பில், இரு பாலின ஈர்ப்பு, ஓர் பாலின ஈர்ப்பு போன்ற சொற்களையே பெரும்பாலும் ஊடகங்கள் முதல் பொதுச்சமூகம் வரை பயன்படுத்தி வருகின்றன. இந்த வார்த்தைகளுக்கு LGBTQIA PLUS சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக, தங்களை திருநர், திருநங்கை, திருநம்பி, மகிழ்வன் உள்ளிட்ட பெயர்களை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்துள்ளனர். 

LGBTQIA PLUS சமுதாயத்தினர் பரிந்துரைத்த பெயர்களையே தற்போதைக்கு பயன்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தந்தைக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டு உறவு இல்லை - பாலினம் மாறிய எலன் மஸ்க்கின் மகன் ஆவேசம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News