மதுரை: MBC பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக 10.5 சதவீதம் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர் சமூகத்திற்கு என தனியாக ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது நீதிபதிகள், இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இட ஒதுக்கீடு அளிக்க முடியுமா? உள்ளிட்ட 6 கேள்விகள் அரசிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளின் உத்தரவு வன்னியர் சமூகத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்து.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "வன்னியர்களுக்கான இடப்பங்கீடு என்பது சாதிப் பிரச்சினை அல்ல... அது சமூகநீதி சார்ந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் மேற்கொண்டு வரும் சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டின் தொடக்கம் வரை நடத்தப்பட்ட அறப்போராட்டங்களின் பயனாகவும் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த மாதம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அதற்கு தமிழக ஆளுனரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து வன்னியர்கள் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான். தமிழகத்தில் கல்வி & சமூக நிலையில் மிக மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கும் சமுதாயமும் வன்னியர்கள் தான். அதனால் அவர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் உண்மையான சமூகநீதி ஆகும்" என அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR