பொங்கல் முடிந்து நிம்மதியா வரலாம்; தூத்துக்குடி டூ தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு!

Special Train, Pongal 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - தாம்பரம் பாதையில் சிறப்பு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 14, 2025, 07:23 PM IST
  • பொங்கலுக்கு தொடர்ச்சியாக 6 நாள்கள் விடுமுறை
  • தென் மாவட்டத்தில் இருந்து பலரும் சென்னையில் பணியாற்றுகின்றனர்.
  • எனவே தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில் இயக்கம்.
பொங்கல் முடிந்து நிம்மதியா வரலாம்; தூத்துக்குடி டூ தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு! title=

Pongal 2025, Special Train Thoothukudi - Tambaram: பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தைத் திருநாளான இன்று வீடுகள், கோயில்கள் தோறும் பொங்கலிட்டு பொங்கலை கொண்டாடினார்கள். தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதலே பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது எனலாம்.

குறிப்பாக, இன்று (ஜன. 14) தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை செயல்படாது. 6 நாள்கள் தொடர்ச்சியான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். நேற்று திங்கட்கிழமை மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. எனவே, நேற்று சிலர் விடுப்பு எடுத்துக்கொண்டு ஜன. 11ஆம் தேதி தொடங்கி, ஜன. 19ஆம் தேதிவரை 9 நாள்களுக்கு பொங்கல் விடுமுறையை எடுத்திருக்கின்றனர்.

கூட்டமின்றி காணப்படும் சென்னை

பொங்கல் பண்டிகைக்கு இத்தனை நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் தென்படுகிறது. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை தொடங்கி சென்னை மெரினா வரை அனைவரும் தங்களின் குடும்பத்துடன் வந்து விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கும், சுற்றுலாவுக்கும் சென்றிருப்பதால் முக்கிய சாலைகளில் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி காலியாக காணப்படுகிறது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோக்களில் கூட்டமின்றி காணப்படுகிறது.

மேலும் படிக்க | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: மார்பில் முட்டிய காளை... மாடுபிடி வீரர் நவீன் உயிரிழப்பு

தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்

வார இறுதியில் கூட்டத்தோடு சென்னைக்கு புறப்பட வேண்டாம் என்பதற்காக நாளையோ, நாளை மறுதினமோ அடுத்தடுத்த நாள்களில் ஊரில் இருந்து கிளம்பலாம் என திட்டமிட்டிருப்பார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஊருக்கு புறப்படலாம் என்றாலும், ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் அதிகமானோர் ஊருக்குப் புறப்படுவார்கள். இதில் பலரும் முன்பதிவு செய்திருப்பார்கள். சிலர் முன்பதிவு செய்திருக்க மாட்டார்கள். அப்படியானவர்களுக்கும், குறிப்பாக தென் மாவட்டத்தினருக்கும் தற்போது சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது.

தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே தற்போது அறிவித்துள்ளது. தூத்துக்குடி முதல் தாம்பரம் வரை செல்லும் இந்த சிறப்பு ரயில் (ரயில் எண்: 06168) வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) மாலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலையில் தாம்பரம் வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் நாளை முன்பதிவு

மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 7, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 6, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியளிக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டி 1, லக்கேஜ் பெட்டி 1 ஆகியவை இந்த ரயிலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயிலின் முன்பதிவு நாளை (ஜன. 15) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் செல்லும் பாதை

வரும் ஜன.19ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோளவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக அடுத்த நாள் (ஜன. 20) அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பொங்கலுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News