Pongal 2025 Special Recipe: தைப் பொங்கல் அன்று மதிய உணவுக்கு வைக்கும் கலவை குழம்பை வைத்து இந்த ருசிமிகுந்த அருமையான சுண்டக்கறியை நீங்கள் செய்யலாம். இதனை எளிமையாக எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம்.
நீங்கள் பொங்கல் அன்று வைத்த பச்சரிசி சாதத்தில் இரவே தண்ணீர் ஊற்றிவைத்து, மறுநாள் பழையதாக தயிர் ஊற்றி சாப்பிடலாம். அப்போது இந்த சுண்டக்கறியுடன் பழைய சாதத்தை சாப்பிட்டால் தேன் அமிர்தமாக இருக்கும்.
பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள் என்றும் பொதுவாக அழைக்கப்படுகிறது. அதாவது, அறுவடையை முன்னிட்டு உழவர்கள் மற்றும் அதனால் பயன்பெறும் மக்கள் கொண்டாடும் விழாவே இந்த தைப் பொங்கல் பண்டிகை.
விவசாயிகள், விவசாயிகளின் உற்பத்தியால் பயனடைந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து பொங்கலிட்டு, அறுவடை பொருள்களை படையல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அப்படியிருக்க, இன்று தைப் பொங்கலை முன்னிட்டு பலரும் வீடுகளிலும், கோயில்களிலும் சூரிய பகவானை நோக்கி பொங்கல் வைத்திருப்பார்கள். மண்பாடம், சில்வர் பாத்திரம் என அவரவர் வசதிக்கேற்ற பாத்திரத்தில் பனை ஓலையில் தீ மூட்டி அடுப்பிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ பொங்கல் வைப்பார்கள்.
தைப் பொங்கல் அன்று பச்சரிசி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கலை பெரும்பான்மையானோர் வைப்பார்கள். அன்று மதியம் அந்த பச்சரிசி சாதத்தைதான் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் தைப் பொங்கல் அன்று யாரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள் எனலாம்.
இந்த பச்சரிசி சாதத்துடன் சாப்பிடுவதற்கு அனைத்து வகை காய்கறிகள், கிழங்குகளை போட்டு குழம்பு வைப்பார்கள். அவியல், கூட்டு, பொரியல், சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம், அப்பளம் வைத்து மதிய உணவை எடுத்துக்கொள்வார்கள்.
அந்த வகையில், நீங்கள் பொங்கலுக்கு அடுத்த நாள் சாப்பிடுவதற்கு சூப்பரான இந்த சுண்டக்கறியை முயற்சித்து பார்க்கலாம். திருநெல்வேலி பகுதியில்தான் இந்த சுண்டக்கறி மிகவும் பிரபலம் எனலாம். அங்கு இடிச்சு வைச்ச சாம்பாரை (இடி சாம்பார்) அடுத்த நாள் சுண்ட வைத்து இந்த சுண்டக்கறியை உண்பார்கள். பெரும்பாலான பகுதியில் கலவை குழம்பு என வைப்பார்கள். அதை வைத்தும் சுண்டக்கறியை செய்யலாம்.
அதாவது, பொங்கல் அன்று வைத்து மீதம் இருக்கும் குழம்புடன், அவியல், கூட்டு, பொரியல் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு சுண்டவைத்து கெட்டியாக மாற்றுவார்கள். அதில் குழம்பு மற்றும் மற்ற அனைத்தின் சாறும் நன்கு இறங்கியிருக்கும்.
இதனை நீங்கள் பொங்கல் விடுமுறை தோறும் தோசை, இட்லி உடனும் சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, பொங்கல் அன்று மீதம் இருக்கும் பச்சரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, அடுத்த நாள் அந்த பழையதை தயிர் கலந்து சாப்பிடலாம். அப்போது இந்த சுண்டக்கறியை வைத்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.