ஜெயம் ரவி-னு கூப்பிடாதீங்க... இப்படியே கூப்பிடுங்க... அவரே சொன்ன பெயர் என்ன தெரியுமா?

Jayam Ravi: காதலிக்க நேரமில்லை திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தனது பெயரை மாற்றி ஜெயம் ரவி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 13, 2025, 05:47 PM IST
  • இனி ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம்
  • எப்படி அழைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
  • தனது ரசிகர் மன்றத்தை அறக்கட்டளையாகவும் மாற்றி உள்ளார்.
ஜெயம் ரவி-னு கூப்பிடாதீங்க... இப்படியே கூப்பிடுங்க... அவரே சொன்ன பெயர் என்ன தெரியுமா? title=

Jayam Ravi New Name Announcement: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ரசிகர்களால் அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது வழக்கம். உதாரணத்திற்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜனி, 'உலக நாயகன்' கமல்ஹாசன், 'தளபதி' விஜய், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா என அடைமொழிகளுடன் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்கள். திரைப்படங்களிலும் இவர்களின் பெயருக்கு முன் இந்த அடைமொழிகளும் இடம்பெறும்.

அதேபோல் ஒரு சிலருக்கு அவர்களின் முதல் படமோ அல்லது அவர்களுக்கு புகழை பெற்று தந்த படமோ அடைமொழியாக மக்கள் மனதில் நின்றிவிடும். உதாரணத்திற்கு 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி ஆகியோரை கூறலாம். இதில் பிரபல நடிகர் 'ஜெயம்' ரவியையும் சேர்க்கலாம்.

'ஜெயம்' ரவி என அழைக்க வேண்டாம்

2003ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' திரைப்படத்தில் நடித்து அத்திரைப்படம் அவருக்கு பெருமை சேர்த்ததால் அவரின் இயற்பெயரோடு சேர்ந்து 'ஜெயம்' ரவி என ரசிகர்களும், திரைத்துறையினரும் அழைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது தன்னை 'ஜெயம்' ரவி என அழைக்க வேண்டாம் என்று நடிகர் ரவி அறிவித்துள்ளார். தன்னை ரவி அல்லது ரவி மோகன் என்ற அழைக்கவும் என ரசிகர்கள், செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவித்து அவர் அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளார்.

அவரது X பக்கத்தில், அந்த அறிக்கையை பகிர்ந்து,'பழையன கழிதலும்... புதியன புகுதலும்...' என குறிப்பிட்டு தனது பெயர் மாற்றத்தை தெரிவித்துள்ளார். மேலும், அவர் X தளத்திலும் அவரது பெயரை மாற்றி உள்ளார்.  

மேலும் படிக்க | வந்த சுவடு தெரியாமல் போன கேம் சேஞ்சர்! 3 நாள் வசூல் இவ்வளவுதானா?

அந்த அறிக்கையில்,"அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில், உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்" என குறிப்பிட்டு அதனை தொடங்கியிருக்கிறார்.

இனி ரவி அல்லது ரவி மோகன்

மேலும் அந்த அறிக்கையில்,"என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும், தற்போதும் எவ்வித மாற்றமின்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில், தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், அன்பு, ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.

இந்த நாள் தொடங்கி, நான் ரவி / ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ்

மேலும் அவர்,"திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக, 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி உள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டுசேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டு வர உதவும்.

அறக்கட்டளையாக மாறும் ரவி மோகன் ரசிகர் மன்றம்

என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, என் 'ரசிகர் மன்றத்தை' பிறருக்கு உதவும் வகையில் 'ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக' மாற்றப்படுகிறது. இது, நான் பெற்ற அன்பையும், ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்வமான முயற்சி.

தமிழ் மக்கள் ஆசியுடன், என் ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும், புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் பனிவோடு கேட்டுக் கொள்கிறேன். உங்களது ஊக்கம் தான், எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும், உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர் நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் நாளை தைத் திருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இவர் தனது மனைவியை பிரிந்ததும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | வெற்றிமாறனின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையா? வெளியான புதிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News