இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் விசாரணை நடத்துவதற்காக அவர்களை தங்கள் காவலில் எடுத்தனர்.
இந்த வழக்கில் ஹவாலா மூலம் டெல்லிக்கு ரூ.10 கோடி அனுப்பப்பட்டதில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து 1 கோடியே 30 லட்சம்தான் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் மீதி தொகை யாரிடம் இருக்கிறது? என்பதை அறிவதற்காகவும், தினகரனுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் உள்ள தொடர்பு பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என்று கூறி அவரையும், மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீசார் தங்கள் காவலில் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் விசாரணைக்காக டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் உள்ளிட்ட 9 பேர் குழுவினர் விமானம் மூலம் நேற்று மதியம் 1.10 மணிக்கு சென்னை அழைத்து வந்தனர்.
தினகரனை பார்க்க அவரது ஆதரவாளர்கள் பலர் விமானநிலைய வளாகத்தில் காத்து இருந்தனர். அ.தி.மு.க. (அம்மா) அணி நிர்வாகிகளான பேச்சாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் அங்கு வந்து இருந்தனர். தினகரன் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த அவர்களால், போலீசார் புடை சூழ வந்த தினகரனை சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. அவருடன் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும், தனது ஆதரவாளர்களை பார்த்த தினகரன் லேசான புன்சிரிப்புடன் அங்கிருந்து வெளியே சென்றார்.
அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தினகரன் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனா பின்னால் வந்த போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். இருவரும் அங்கிருந்து நேராக பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறிது நேரம் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், இருவருக்கும் அங்கேயே மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு இருவரையும் தனித்தனி காரில் போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, போலீஸ் காரில் ஏறுமாறு தினகரனை டெல்லி போலீசார் வலியுறுத்தினர். அதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்த போதிலும், போலீஸ் காரிலேயே அவர் பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னால் வந்த காரில் மல்லிகார்ஜூனா பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.
அங்கு தினகரனை பார்க்க அவரது ஆதரவாளர்கள் பலர் முண்டியடித்தனர். சிலர் வீட்டிற்குள் நுழையவும் முயன்றனர். அவர்களை டெல்லி போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்து, வீட்டின் கதவையும் இழுத்து மூடினர்.
வீட்டின் உள்ளே தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டின் ஒவ்வொரு அறையையும் ஆய்வு செய்த போலீசார், அங்கிருந்த பீரோவில் சோதனை நடத்தினர். கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றையும் ‘ஆன்’ செய்து முக்கிய ஆவணங்களை சேகரித்தனர். பண பரிமாற்றத்துக்கான ஆவணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தினகரனின் மனைவி அனுராதாவிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின்போது, தமிழக போலீசார் யாரையும் டெல்லி போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
பின்னர், மாலை மல்லிகார்ஜூனாவை மட்டும் டெல்லி போலீசார் அருகில் உள்ள தினகரனின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த அலுவலகத்தை மல்லிகார்ஜூனாதான் நிர்வகித்து வருகிறார். எனவே, அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அலுவலகத்தில் இருந்த அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இரவு 7.15 மணி வரை நீடித்தது.
அதன்பிறகு, மல்லிகார்ஜூனா மீண்டும் தினகரனின் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தப்பட்டது.
இரவு 7.30 மணிக்கு மல்லிகார்ஜூனா மட்டும் காரில் ஏற்றப்பட்டு, அங்கிருந்து அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் டெல்லி போலீசார் 4 பேர் சென்றனர். அவரது இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்குள்ளவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அதே நேரத்தில், தினகரன் இல்லத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
தினகரனிடம் டெல்லி போலீசார் நேற்று பல்வேறு கேள்விகளை கேட்டு சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இதேபோல் மல்லிகார்ஜூனாவிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்ததும் தினகரன் ராஜாஜி பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவில் அங்கு தங்க வைக்கப்பட்டார். இன்று (வெள்ளிக்கிழமை) அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்து செல்லப்படுவார் என்றும், அங்கு வைத்து அவரிடம் மேலும் விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.