வங்கக் கடலில் உருவான கஜா புயல் தாக்கியதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கபட்ட பகுதிகளில் மீட்பு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் மற்றும் 105 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளது. 12 ஆயிரம் குடிசைகள் நாசமாயின. ஏராளமான விலங்குகளும் பலியாகியுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்டு நோய் பரவாமல் இருக்க மருத்துவ குழுக்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டு பகுதிகளை பார்வையிட்டார் திமுக மு.க. ஸ்டாலின். அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். வீடுகளையும் உடமைகளையும் இழந்து சோகத்தில் இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் புயலால் சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிட்டார். மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘தானே, வர்தா, ஓகி வரிசையில் #CycloneGaja பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன்.
அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை!’ என பதிவிட்டுள்ளார்.