New Governors Appointment: மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்திற்கான புதிய துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமனம் செய்தார்.
மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த நியமனத்தில், மகாராஷ்டிர ஆளுநராக இருந்த பகத் சிங் கோஷயாரி, லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் ஆகியோரின் ராஜினாமைவை குடியரசு தலைவர் ஏற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பகத் சிங் கோயஷாரி தான் ஆளுநர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக பிரதமர் மோடியிடம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.
இதில், தமிழ்நாடு பாஜகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் மாநில தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் தற்போது நாகலாந்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், கூடுதலாக மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும் (பொறுப்பு) உள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமிக்கப்பட்டார். அதேபோன்று, ஆந்திர ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராகவும், இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் பீகார் ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநரான சவுகான், மேகாலயா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளனர். மேலும், யூனியன் பிரதேசமான லடாக்கில், ஆர்.கே. மாத்தூர் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, பி.டி. மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன் வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து சி.பி. ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க உள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்ததால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ