கோயம்புத்தூர்: பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பன்னிரெண்டாம் வகுப்பு சிறுவனும், அந்த செயலை மொபைல் ஃபோனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய, ஒன்பதாம் மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
16 வயதான அந்த மாணவன் மற்றும் 15 மற்றும் 16 வயதான அவனது நண்பர்கள் மீது போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிறார் நீதி மன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு கண்காணிப்பு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தகாத செயலை படம் பிடித்த சிறுவர்கள் சமூக ஊடகங்களில் அதை பகிர்ந்தனர்
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட அந்த 15 வயது சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், லாரி ஓட்டுனராக உள்ள அவரது தந்தை ஒரு குடிகாரர் என்றும் குருபரப்பள்ளி போலீசார் தெரிவித்தனர்.
சிறுமியின் தம்பி ஒரு மாணவர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
போலீசார் அளித்த தகவல்களின் படி, பதினோராம் வகுப்பு சிறுவன் அந்த சிறுமியுடன் பேசி பழகியுள்ளான். நல்ல நண்பன் என அந்த சிறுமி நினைக்கத் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிறுவன் சிறுமியை அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மற்றொரு பதினோராம் வகுப்பு சிறுவன் அதை தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளான்.
இரண்டு சிறுவர்களும் அந்த வீடியோவை ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் தங்கள் நண்பனுடன் பகிர்ந்துள்ளார்கள். அந்த மாணவன் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் (Social Media) பகிர்ந்தான். அந்த வீடியோ அப்பகுதியில் வைரலாகியது. அதைப் பற்றி அறிந்த சிறுமியின் தந்தை சனிக்கிழமையன்று பிரதான குற்றவாளியான சிறுவனிடம் இது குறித்து கேட்டார்.
அவர் சனிக்கிழமையன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை ஞாயிற்றுக்கிழமை போலீசார் (Police) கைது செய்தனர்.
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரிவு 3 (ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமை), 4 (ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 13 (b) (c) (ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்) 14 (ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்தியதற்கான தண்டனை) ஆகிய போக்சோ சட்ட (Pocso Act) பிரிவுகள் மற்றும் IT சட்டத்தின் 65 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படிப்பில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் இந்த சிறுவர்களுக்கு இப்படிப்பட்ட கொடூரமான எண்ணங்கள் வரக் காரணம் என்ன? நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது? தனக்கு நடந்த கொடுமையை அந்த சிறுமி ஏன் யாரிடமும் கூறவில்லை? அவளது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரைக் கூட நம் சமூகத்தால் அவருக்கு அளிக்க முடியவில்லையா? நண்பன் ஒரு தீய செயலை செய்யும்போது அதைத் தடுக்காமல் படம் பிடிக்கும் நட்பு ஒரு நட்பா? இதுதான் இந்த காலத்து ‘ஹை-டெக்’ நட்பா? இளம் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்தது யார்? வீட்டுச் சூழலா, சமூக சீர்கேடா, தனி மனித ஒழுக்கம் என்பது மறைந்து விட்டதா?
இத்தனை கேள்விகளுக்கும் பதிலை நம்மால் தேட முடியுமா? அப்படி தேடி நாம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடாதா?
பெண்ணே…. விடைகள் கண்டறியப்படும், தீர்வுகள் கூட பிறக்கலாம். ஆனால், அது வரை நீதான் உன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீ பச்சிளங்குழந்தையோ, பொக்கைப் பல் பாட்டியோ, சீரழிக்க நினைப்பவனுக்கு, நீ ஒரு உடல் மட்டுமே. ஆகையால், உன்னை நீதான் பாதுகாத்துக்கொள்ள வெண்டும். இது கயவர்கள் உலா வரும் உலகம், கண்ணியத்தை எதிர்பார்க்காதே. இது மனித உருவில் மிருகங்கள் அலையும் உலகம், மயங்கி விடாதே. இது, நண்பன் என்ற போர்வையில் நரிகள் நடமாடும் உலகம். நட்பின் போர்வையில் நெருங்கினாலும் நம்பி விடாதே.
பெண்ணே… தீயாய் இரு, நெருப்பாய் சுடு, சரணடையாதே, சுருண்டுவிடாதே, உன்னை நீதான் காத்துக்கொள்ள வேண்டும்!!
ALSO READ: ஆம்புலன்ஸ் வாகனத்தில் Covid நோயாளியை பலாத்காரம் செய்த ஓட்டுனர்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR