காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 23-ஆம் தேதி திமுக நடத்துவதாகத் திட்டமிட்ட அனைத்துக் கட்சிக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக காவிரி நதிநீர் வழக்கில், சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருந்தார்.
இதை தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜெயக்குமார் வரும் 22ந் தேதி முதல் அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.
இதில் பங்கு பெற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து 23 ஆம் தேதி எதிர்கட்சிகள் சார்பில் நடத்தப்பட இருந்த அனைத்து கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.