பெண் தொழிலதிபர் கடத்தல் ரூ. 20 கோடி கேட்டு

Last Updated : Jun 24, 2016, 11:24 AM IST
பெண் தொழிலதிபர் கடத்தல் ரூ. 20 கோடி கேட்டு title=

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரூ. 20 கோடி கேட்டு பெண் தொழிலதிபரைக் கடத்தி, குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டியதுடன், 15 பவுன் நகை, ரூ. 40 ஆயிரத்தை கொள்ளையடித்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் இயங்கிவரும் ரிக் வாகனம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பஷீர். இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காலமானார்.

இதையடுத்து 43 வயதான அவரது மனைவி ஷர்மிளாபானு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் புதன்கிழமை பிற்பகல் வேலூர் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு உணவருந்த காரில் சென்றுவிட்டு, மாலை 4 மணியளவில் மீண்டும் தொழில் நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

கார் வழக்கமான பாதையில் செல்லாமல் பாதை மாறிச் செல்வதைக் கவனித்த அவர், ஓட்டுநர் அக்பர் அலியிடம் கேட்டராம். போக்குவரத்து நெரிசலாக உள்ளதால், மாற்றுப் பாதையில் செல்வதாகத் தெரிவித்துள்ளார். அங்கு இரண்டு இளைஞர்கள், பர்தா அணிந்த ஒரு பெண் என 3 பேரை ஓட்டுநர் அக்பர் அலி காரில் ஏற்றினார். பிறகு ஷர்மிளாவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மர்ம நபர்கள் ஷர்மிளா பானுவிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். அதனால், அவர் பணம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அதற்கு கால அவகாசமும் கேட்டுள்ளார். அதையடுத்து அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகையை பறித்துள்ளனர்.

பின்னர் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி உள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த ஷர்மிளா பானு காரை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் ஷர்மிளாவை அவரது குடும்பத்தினர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகினறனர்.

Trending News