மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!
அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
எனினும் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் ஆணையத்தின் காலம் முதலில் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் மூன்று முறை தலா 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில் தற்போது 5-வது முறையாக தமிழக அரசு மேலும் 4 மாதங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கால நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வரும் 1-ஆம் நாள் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிராக, அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.