சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தின் காரணத்தால் சென்னை நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வருகிற 28 ஆம் தேதி வரை சென்னை நகரில் போலீசாரின் அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங் களை நடத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், போலீசாரின் உத்தரவை மீறி சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14 ஆம் தேதி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வண்ணாரபேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்ச் 11 ஆம் தேதி வரை தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று காலை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டசபை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். தடை உத்தரவை மீறி, போராட்டக்காரர்கள் சட்டசபையை நோக்கி முன்னேறினால் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த திடீர் போராட்டம் காரணமாக, அண்ணா சாலையில் இருந்து வாலாஜா வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நேப்பியர் பாலம் வழியாக தலைமைச் செயலகம் வழியே செல்ல கூடிய பேருந்துகள் சிவானந்தா சாலையில் அனுப்பப்படுகின்றன.