ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக வரும் 23-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு 2 தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளுக்கு மே16-ந் தேதி தேர்தல் நடந்தது. 232 தொகுதிகளிலும் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. மழையினால் வாக்கு சதவித சற்று குறைந்துவிட்டது. மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை வேட்பாளர் மற்றும் மக்களிடம் ஏற்பட்டது.
கடைசியாக வாக்குப்பதிவு நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி,-த.மா.கா. அணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அனைத்து தொகுதியிலும் போட்டியிட்ட பா.ம.க பாரதீய ஜனதா கூட்டனி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கும் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர்-க்கு பிறகு ஆளும் கட்சியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும். 2011-ம் ஆண்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினார்கள்.