ஆடி மாதம் (Aadi Month) தமிழ் நாட்காட்டியின் (Tamil Calender) நான்காவது மாதமாகும். இந்த மாதத்தில்தான் சூரியன் உத்திராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறுகிறார். ‘ஆயனம்’ என்றால் நடமாட்டம் என்று பொருள். அதாவது ஆடி மாதத்தில் சூரியன் தெற்கு நோக்கி புறப்படுகிறார். தமிழகத்தையும் (Tamil Nadu) தமிழர்களையும் பொறுத்த வரை ஆடி மாதம் மிக முக்கியமான மாதங்களில் ஒன்று என்று கூறலாம்.
ஆடி என்பது முக்கியமாக நம் பெண் தெய்வங்களான அம்மன்கள், பெண் தேவதைகள், காவல் தெய்வங்கள் ஆகியோருக்கான மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் விரதமிருந்து அம்மன் கோயில்களில் (Amman Temples) தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவர்களின் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் என்று நம்பப்படுகின்றது. ஆடி மாதத்தில் அநேகமாக அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நடத்தப்படுகின்றன. தெய்வீக சக்தியுடன் நம்மை இணைத்துக்கொள்ள ஆடி மாதம் உகந்த மாதமாக கருதப்படுகின்றது.
ஆடி மாத துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் குறையத் துவங்குகிறது. வெப்பம் குறைந்து மழை பெய்யத் துவங்கும் நேரமும் இதுதான். ஆடியில் காற்றும் பலமாக வீசும். ஆடியில் வீசும் காற்று தன்னுடன் அம்மன் அருளையும் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் என்ற நமிக்கையும் கிராமப்புறங்களில் உள்ளது.
ஆடி மாதத்தில் வரும் நல்ல நாட்கள்
பொதுவாக ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய் மற்றும் வெளிக்கிழமைகளும் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நாட்களில், பெண்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்து மற்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் அளிப்பது வழக்கம்.
இந்த மாதத்தில் கொண்டாடப்படும் சில முக்கியமான பண்டிகைகள் பின்வருமாறு:
ஆடிப்பிறப்பு: ஆடி மாதத்தின் முதல் நாள் ஆடிப் பண்டிகை அல்லது ஆடிப்பிறப்பு என்று கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், இலங்கையிலும், ஈழத் தமிழர்களுக்கு மத்தியில் ஆடிப்பிறப்பு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
வரலட்சுமி அம்மன் விரதம்: லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான பூஜைகளில் ஒன்றான வரலட்சுமி பூஜை ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை செய்யப்படுகிறது. இந்த நாளில் வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு பிரசாதங்கள் அளிக்கப்ப்டுகின்றன.
ஆடிப்பெருக்கு: ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கப்படும் இந்த விழா ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. நல்ல மழைக்கும், வளமான பயிருக்கும், செழிப்பான விளைச்சலுக்கும் மக்கள் கடவுளை வேண்டும் நாளாகும் இது. பருவமழை காரணமாக பொதுவாக, இந்த காலத்தில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரைக் காணவும், வணங்கவும் மக்கள் ஆற்றங்கரைக்கு வந்து படையல் இடுவது வழக்கம். சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் ஆற்றங்கரையிலேயே உணவுண்டு பேசி மகிழும் நாளாகும் இது.
ஆடிப்பூரம்: ஆடிப்பூரம் (Aadipooram) ஆண்டாள் நாச்சியாரின் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்நாளில் சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதைக்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்படுகின்றன.
ஆடிக்கிருத்திகை: ஆடிக்கிருத்திகை (Aadkrithigai) தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகும். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் முருகனுக்கு விரதமிருந்து வணங்குவோரை எந்த வினையும் அண்டாது.
ALSO READ: திருப்பதி திருமலை கோயிலை தற்காலிகமாக மூட TTD ஊழியர்கள் பரிந்துரை....
புத்துக்கு பால்: ஆடி மாதம் வரும் நாக பஞ்சமியில் மக்கள் புற்றுகளில் உள்ள பாம்புகளுக்கு பால் ஊற்றுவது வழக்கம். பாம்புகளை கடவுளின் பிரதிநிதியாகப் பார்க்கும் நம் கலாச்சாரத்தில் இது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெருகிறது. சிலர் பாம்பின் சிலைகளுக்கு பால் அபிஷேகமும் செய்கிறார்கள். பால் ஊற்றி அபிஷேகம் செய்வதால் நாக தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆடி மாதத்தில் நாமும் இறைபக்தியுடன் நல்ல காரியங்களில் ஈடுபட்டு இறையருள் பெறுவோம்!!