ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் நூறாவது நாள் கடந்த 22-ம் தேதி எட்டியது. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என பேசப்பட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில், வழக்கு தொடரப்பட்டால், தங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என கோரப்பட்டுள்ளது.