INDvsSA: 2-வது ஒருநாள்: இந்திய அணி வெற்றி! முழு விவரம் உள்ளே!!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒருநாள் போட்டி நேற்று சென்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

Last Updated : Feb 5, 2018, 08:43 AM IST
INDvsSA: 2-வது ஒருநாள்: இந்திய அணி வெற்றி! முழு விவரம் உள்ளே!! title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒருநாள் போட்டி நேற்று சென்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவை 32.2 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, பின்னர் 20.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக, டாஸ் வென்ற இந்தியா முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன் டு பிளெஸ்ஸிக்கு பதிலாக அறிமுக வீரர் கயா ஸோண்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆல் ரவுண்டர் பெலுக்வாயோ நீக்கப்பட்டு, இடது கை சுழற்பந்துவீச்சாளர் டாப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்பட்டார்.

அம்லா, டி காக் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 39 ரன் சேர்த்தது. அம்லா 23 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி காக் 20 ரன் எடுத்து சாஹல் சுழலில் ஹர்திக் பாண்டியா வசம் பிடிபட்டார். 

கேப்டன் மார்க்ராம் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, அதிரடி வீரர் டேவிட் மில்லர் டக் அவுட்டானார். இவர்கள் இருவரும் குல்தீப் யாதவ் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்திருந்த தென் ஆப்ரிக்கா, மேற்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்காமல் 3 விக்கெட்டை பறிகொடுத்து 13.5 ஓவரில் 51/4 என திடீர் சரிவை சந்தித்தது. 

பின்னர் ஜீன் பால் டுமினி - ஸோண்டோ ஜோடி 5வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 48 ரன் சேர்த்தது. ஸோண்டோ, டுமினி தலா 25 ரன் எடுத்து சாஹல் சுழலில் அவுட்டானார்கள். இதைத் தொடர்ந்து ரபாடா (1), மார்கெல் (1), தாஹிர் (டக் அவுட்) அணிவகுப்பு நடத்தினர். மோரிஸ் 14 ரன் எடுத்து சாஹல் சுழலில் புவனேஷ்வர் வசம் பிடிபட, தென் ஆப்ரிக்கா 32.2 ஓவரிலேயே 118 ரன்னுக்கு சுருண்டது. ஷம்சி (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 19 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது. 

இந்திய பந்துவீச்சில் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் சாஹல், குல்தீப் இருவரும் அபாரமாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினர். யஜ்வேந்திர சாஹல் 8.2 ஓவரில் 1 மெய்டன் உட்பட 22 ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. குல்தீப் 3, புவனேஷ்வர், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 119 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 

ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 15 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் மார்கெல் வசம் பிடிபட்டார். தவான் - கோலி ஜோடி விளையாடி ரன் சேர்த்தது. இந்தியா 20.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து வென்றது.

தவான் 51 ரன் (56 பந்து, 9 பவுண்டரி), கோஹ்லி 46 ரன்னுடன் (50 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

Trending News