யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையினை சிதைத்தவர் மகேந்திர சிங் தோனி தான் என யுவராஜின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்!
ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விசித்திரமான கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவதில் வல்லவர். அந்த வகையில் தற்போது மகேந்திர சிங் தோனியை நோக்கி அவரது வர்த்தை அம்புகளை வீசியுள்ளார். மேலும் அவர் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை கீழ்நோக்கிச் சென்றதற்கு காரணம் தோனி தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெருவதற்கு முக்கிய கருவியாக விளங்கியவர் யுவராஜ் சிங்.
அதன் பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்த யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். இருந்தும், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தான் இடம்பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவரது நம்பிக்கைக்கு மாறாக அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனையடுத்து, விரக்தியாகவும், அதிருப்தியாகவும் இருந்த யுவராஜ் சிங் கடந்த மாதம் தனது ஓய்வை அறிவித்தார். யுவராஜ் சிங்கின் இந்த முடிவிற்கு காரணம் மகேந்திர சிங் தோனி தான் என அவரது ரசிகர்கள் உள்பட பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இதனை யுவராஜின் தந்தை யோகராஜூம் ஆமோதித்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த ஓரங்கட்டப்பட்ட இளம் வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு அறிவுரை அளிக்கும் விதமாக மீண்டும் தோனியை சீண்டியுள்ளார் யோகராஜ் சிங்.
நடப்பு உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து அம்பத்தி ராயுடு ஓரங்கட்டப்பட்டார். இதனையடுத்து அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக ராயுடு அறிவித்தார். இந்நிலையில் இதற்கு தனது கருத்தினை பதிவு செய்துள்ள யோகராஜ் "ராயுடு தனது முடிவினை திரும்ப பெற வேண்டும். ரஞ்சி கோப்பை, இராணி கோப்பை, துலீப் கோப்பை என அனைத்து கோப்பை போட்டிகளிலும் நின்று விளையாடி புகழடைய வேண்டும். தோனி போன்ற குப்பைகள் அணியில் இருக்கும் போது, ராயுடு அணியில் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையது அல்ல" என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்திய அணியில் டோனி இடம்பிடிக்கும் போது முன்னணி வீரராக இருந்த யுவராஜ் சிங்கிற்கு அணி தலைவர் பதவி அளிக்காமல், அவரை விட இளம் வீரரான டோனிக்கு அணி தலைவர் பதவி அளிப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.