Ashes 2023: போராடி வென்றது இங்கிலாந்து... ஆஸ்திரேலியா ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

Ashes 2023: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து தனது முதல் வெற்றியை இத்தொடரில் பதிவு செய்தது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 9, 2023, 09:08 PM IST
  • ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
  • ப்ரூக் அரைசதம் கடந்து இங்கிலாந்தின் வெற்றிக்கு கைக்கொடுத்தார்.
  • கடைசி இன்னிங்ஸில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Ashes 2023: போராடி வென்றது இங்கிலாந்து... ஆஸ்திரேலியா ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! title=

Ashes 2023: ஆஷஸ் தொடர் என்பது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றாலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட டெஸ்ட் தொடர் இதுதான். இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரில், நடப்பு சீசன் இங்கிலாந்தின் இந்த கோடை காலத்தில் நடைபெற்று வருகிறது. 

பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

எதிர்பார்ப்புடன் தொடங்கிய 3ஆவது டெஸ்ட்

இதனால், ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் பலத்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. 2-0 என்ற முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றவும், தொடரை உயிர்ப்புடன் வைத்து தனது வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்பில் இங்கிலாந்தும் இந்த மூன்றாவது டெஸ்டில் விளையாடின. 

இரண்டாவது போட்டியை போன்றே டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கும், இங்கிலாந்து 237 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. தொடர் காட்டிய அதே ஆதிக்கத்தை ஆஸ்திரேலியா இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் தொடர்ந்தது எனலாம். 

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் சரவெடியாக ஆடிய ரிங்கு சிங்குக்கு பதிலாக இவரை ஏன் எடுத்தீங்க - பிசிசிஐ மீது முன்னாள் வீரர் காட்டம்

ஆட்டத்தை மாற்றிய 3ஆவது நாள்

பின்னர், ஆட்டத்தின் இரண்டாம் நாளே (ஜூலை 7) 26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. முன்னதாக, ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 47 ஓவர்கள் விளையாடி 116 ரன்களை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்திருந்தது. மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை வரை ஒரு பந்துகூட வீசப்படவில்லை. அடுத்து மூன்றாம் செஷனில் போட்டி தொடங்கப்பட்டது. அந்த செஷனில் இங்கிலாந்து அற்புதமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டை கைப்பற்றியது. 

251 ரன்கள் இலக்கு

நேற்று ஆஸ்திரேலிய பேட்டர்கள் சுமார் 20 ஓவர்கள் மட்டும் தாக்குபிடித்து 108 ரன்களை மட்டும் குவித்தனர். இதில் ஹெட் அதிகபட்சமாக 77 ரன்களை குவித்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராட், வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 251 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து நேற்று களமிறங்கி 5 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி 27 றன்களை எடுத்தது. 

இதன்மூலம், 10 விக்கெட்டுகள், 2 நாள்களை கையிருப்பில் வைத்திருந்த இங்கிலாந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம்கணடனர். ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே டக்கெட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த மொயின் அலி 3ஆவது வீரராக களமிறங்கி ஆச்சரியமளித்தாலும், அவர் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியும் அளித்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்டார்க் கைப்பற்றினார். 

ஸ்டோக்ஸ் ஏமாற்றம்

அடுத்து வந்த ரூட், க்ராலி உடன் கூட்டு சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருப்பினும், க்ராலி 44 ரன்களில் மிட்செஸ் மார்ஷ் ஓவரில் வீழந்தார். ரூட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 21 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார்.  இதனால், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீது பலத்த எதிர்பார்ப்பை கொண்டது. மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 153 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சற்று நம்பிக்கை அளிக்கும் நிலையில் இருந்தாலும், உணவு இடைவேளைக்கு பின் சில ஓவர்களிலேயே ஸ்டோக்ஸ் 13 ரன்களை எடுத்து விரைவாகவே வெளியேறி அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோவ்வும் 5 ரன்களில் வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது. 

ப்ரூக் அசத்தல்

களத்தில் ப்ரூக் உடன் கிறிஸ் வோக்ஸ் கூட்டணி சேர்ந்தார். ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவை தூக்கிய பின் வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என எதிர்பார்ப்பில் இந்த ஜோடி மண்ணள்ளிப்போட்டது. அபாரமாக விளையாடி இந்த ஜோடி 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலக்கை நெருங்க உதவியது. அரைசதம் கடந்த ப்ரூக் 75 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ஆட்டநாயகன் மார்க் வுட்

தொடர்ந்து, களம்கண்ட மார்க் வுட் அடுத்தடுத்து ரன்களை குவித்து இலக்கை எட்டி தொடரில் இங்கிலாந்தின் முதல் வெற்றியை உறுதிசெய்தார். இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. வோக்ஸ் 32 ரன்களுடனும், வுட் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக பந்துவீசியும் வெற்றியை எட்ட முடியவில்லை. மார்க் வுட் ஆட்ட நாயகனாக தேர்வானார். 

4ஆவது போட்டி எப்போது?

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும், தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற கேள்வி தற்போது சுவாரஸ்ய கட்டத்தை அடைந்துள்ளது எனலாம். அடுத்த நான்காவது போட்டி ஜூலை 19ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட்மைதானத்தில் தொடங்க உள்ளது. 

மேலும் படிக்க | IND vs WI: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து ரஹானே நீக்கம்? பிசிசிஐ ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News