IND vs AUS: வருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர் - பிளேயிங் லெவனில் பலியாகப்போவது யார்?

Team India: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுவது ஒருபுறம் இருக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு மற்றொரு தலைவலி இந்த போட்டியில் ஏற்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 28, 2023, 01:04 PM IST
  • இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வர அதிக வாய்ப்பு.
  • ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக கடைசி மூன்று போட்டிகளில் அறிவிக்கப்பட்டார்.
  • மூன்றாவது டி20 போட்டி கௌகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
IND vs AUS: வருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர் - பிளேயிங் லெவனில் பலியாகப்போவது யார்? title=

India National Cricket Team: ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடருக்கு (ICC World Cup 2023) பின் இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவிலேயே விளையாடி வருகிறது. உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், இங்லிஸ், ஷேன் அபாட், ஆடம் ஸாம்பா போன்ற வீரர்கள் இந்த தொடரிலும் விளையாடி வருகின்றனர். இருப்பினும், கேப்டன் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்துள்ளன.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 209 ரன்களை ஆஸ்திரேலியா அடித்தாலும் அதனை இந்திய அணி (Team India) கடைசி பந்து வரை சென்று வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது. அதேபோல், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் (நவ. 26) இரண்டாவது போட்டியில் இந்தியா 236 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. அதிலும் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தொடரை கைப்பற்றவதற்கு இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

சூர்யகுமாருக்கு கூடுதல் தலைவலி

அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டி20 போட்டி (IND vs AUS T20) கௌகாத்தி பரஸ்பரா மைதானத்தில் இன்று (நவ. 28) இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. தொடரை கைப்பற்றுவது ஒருபுறம் இருக்க சூர்யகுமார் யாதவிற்கு (Suryakumar Yadav Captaincy) மற்றொரு தலைவலி இந்த போட்டியில் ஏற்பட்டுள்ளது. 

முதலிரண்டு போட்டிகளுக்கு ஓய்வில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), இந்த போட்டி முதல் துணை கேப்டனாக இந்திய அணியுடன் இணைகிறார். முதல் இரு போட்டியில் ருதுராஜ் துணை கேப்டனாக செயல்பட்டிருந்தார். அணி அறிவிப்பின்போதே மூன்றாவது போட்டி முதல் ஷ்ரேயாஸ் துணை கேப்டனாக வருவார் என அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | விபத்தில் சிக்கினாரா விராட்...? மூக்கில் வெட்டு, கண்ணில் காயம் - வைரலாகும் புகைப்படம்!

எனவே, ஷ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் (IND vs AUS Playing XI) விளையாடுவது ஏறத்தாழ உறுதிதான். முதலிரண்டு போட்டிகளிலும் அசால்ட்டாக வெற்றியை பெற்றுத் தந்த அந்த கூட்டணியை உடைத்தாக வேண்டிய சூழலுக்கு சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தள்ளப்பட்டுள்ளார். அனுபவ வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவது கூடுதல் பலம் என்றாலும் அவருக்கு பதில் யாரை நீக்குவது என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இருப்பினும் ஷ்ரேயாஸ் உள்ளே வந்தால் இந்த 2 வீரர்களில் ஒருவர்தான் பெரும்பாலும் அணியில் இடம்பெற மாட்டார் என கூறலாம். ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது மிடில் ஆர்டர் பேட்டர் திலக் வர்மா.

ஏன் ருதுராஜ் கெய்க்வாட்?

இரண்டாவது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் என முதல் மூன்று பேட்டர்களும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் சரவெடியாக வெடித்து அதிரடி காட்ட ருதுராஜ் (Ruturaj Gaikwad) நிதானத்துடன் விக்கெட்டை இழக்காமல் கடைசி வரை தாக்குப்பிடித்தார். மேலும், இஷான் கிஷன் பெரும்பாலான போட்டிகளில் ஓப்பனராகவே விளையாடி உள்ளார். இதுவரை பவர்பிளே ஓவர்களில் ஜெய்ஸ்வால் என்றால், பவர்பிளே ஓவர்களுக்கு பிறகு ஸ்பின்னர்களை தாக்குவது இஷான் கிஷனாகவே இருந்தது. இடதுகை சுழல், ஆப் ஸ்பின்களை அசால்ட்டாக டீல் செய்வார் என்பதால் இஷான் ஒன் டவுணிலும் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் இப்போது ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) வந்தால் அவர் இஷானின் ஒன் டவுண் இடத்தில் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது. இதனால், இஷான் ருதுராஜின் இடத்தை பிடிக்க நேரிடலாம். சுப்மான் கில் டி20 அணிக்குள் வரும்போது எப்படியும் ருதுராஜ்தான் அமரவைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

திலக் வர்மா அமரவைக்கப்படுவாரா?

ஓப்பனிங்கிலும், ஒன் டவுணிலும் தற்போது இடதுகை வீரர் உள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட்தான் இடது - வலது காம்பினேஷனில் பங்களிப்பை கொடுக்கிறார். மேலும் அவருக்கு பதில் ஷ்ரேயாஸை கொண்டுவந்தால் ஓப்பனிங்கில் பிரச்னை வரலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த இரு போட்டிகளில் பெரிதாக ரன்களை குவிக்காத திலக் வர்மா (Tilak Varma) அமரவைக்கப்படவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவர் மிடில் ஆர்டரில் இடதுகை ஆப்ஷனை கொடுக்கிறார் என்றாலும் நம்பர் 5இல் ஷ்ரேயாஸ் விளையாடுவது கூடுதல் பலத்தை சேர்க்கலாம். மேலும், வெற்றிகரமான அந்த டாப்-ஆர்டர் உடையாமலும், சிதையாமலும் இருக்க ஷ்ரேயாஸை 5ஆவது இடத்திற்கு அனுப்பவதுதான் சரி என கூறப்படுகிறது. மேலும், 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளதால் அக்சர் படேலையும் நீக்குவது சிரமம். அவரும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு திரும்பிய பிறகு ஹர்த்திக் பாண்டியா ரியாக்ஷன்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News