தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும்.
இதனால் மாணவர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 16-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதியும் வெளியாகும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்கூட்டியே அறிவித்து இருந்தார்.
அந்த அறிவிப்பின் படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக இறங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...!
அதில், கடந்த 1998ஆம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர். 2003ஆம் ஆண்டு முதல் அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
2015ஆம் ஆண்டு முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்களிலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் தேர்வில் ரேங்க் அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.