Baba Re Release: படுதோல்வியடைந்த பாபா ரீ ரிலீஸ் ஏன்... நிறைவேறுமா ரஜினியின் ஆசை?

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது. அதனைக் கொண்டு தனது கனவு படமான பாபாவை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிட்டால் 2002ல் பாபா விட்டதை 2022ல் பிடித்துவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறார் ரஜினி.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 10, 2022, 07:25 AM IST
  • பாபா 2002ஆம் ஆண்டு வெளியானது
  • இன்று படம் ரீ ரிலீஸ் ஆகிறது
  • ரஜினி புதிதாக டப்பிங்கெல்லாம் பேசியிருக்கிறார்
 Baba Re Release: படுதோல்வியடைந்த பாபா ரீ ரிலீஸ் ஏன்... நிறைவேறுமா ரஜினியின் ஆசை? title=

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். தீவிர ஆன்மீகவாதியான ரஜினி இமயமலை செல்வதும், பாபா தரிசனம் செய்வதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி பாபா மீது இருக்கும் தனது பக்தியை பறைசாற்றும் விதமாக 2002ஆம் ஆண்டு அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் பாபா. அவரது ஆஸ்தான இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கினார்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என பேச்சுக்கள் ஒருபுறம் வலுக்க, ரஜினியின் கடைசி படம் பாபாதான் என ஆரூடம் ஒரு பக்கம் வலுக்க மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது பாபா. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்தத் தோல்வி சமீபத்தில் தோல்வியடைந்த ரஜினி படங்களான அண்ணாத்த, தர்பார் உள்ளிட்ட படங்களின் தோல்வியைவிட பெரிதாகவே கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாபாவால் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தையும் கொடுத்தார் ரஜினி. இப்படி ரஜினிக்கு பாபா படம் பெரும் வடுவையே கொடுத்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு தோல்வி படத்தை ரஜினி ஏன் இப்போது ரீ ரிலிஸ் செய்கிறார்?. அதிலும் தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி புதிதாக டப்பிங்கெல்லாம் பேசி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது எனில் பாபா படத்தின் மீது ரஜினிக்கு ஏன் இவ்வளவு பெரிய ஈடுபாடு என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது.

Suresh, Rajini

பாபா ஆன்மீகமும், பேண்டஸியும் கலந்த ஒரு படம். 7 மந்திரங்கள், ரஜினியின் நாத்திக வசனங்கள், அரசியல் தொடர்பான வசனங்கள், பாடல்களில் அதுதொடர்பான வரிகள் என பாபா முழுக்க முழுக்க ரஜினியின் எண்ணத்தில் உருவான படம். ஆனால் அப்போது இருந்த தொழில்நுட்பமும், ரசிகர்களின் எண்ண ஓட்டமும் ரஜினிக்கு இசைந்துகொடுக்கவில்லை. அதுவரை ரஜினியை அவரது திரைப்படங்களில் மக்களோடு மக்களாக பார்த்து பழகிய ரசிகர்களால் அந்நியப்பட்டுப்போன பாபாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் கிராஃபிக்ஸ் காட்சிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

அதேசமயம், ரசிகர்களுக்கு ஃபேண்டஸி மீதான மோகம் எப்போதும் தீராது என்பதையும் ரஜினி அறிந்தே வைத்திருக்கிறார். அதற்கு உதாரணமாக அவர் காந்தாராவை கை காட்டலாம். காந்தாரா படமும் ஆன்மீகமும், ஃபேண்டஸியும் கலந்த ஒரு படம். அந்தப் படம் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றது. இது ரஜினியின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து பாபாவை ஏன் ரீ ரிலீஸ் செய்யக்கூடாது என எண்ணம் அவருக்கு தோன்றியிருக்கிறது.

Baba

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது. அதனைக் கொண்டு தனது கனவு படமான பாபாவை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிட்டால் 2002ல் பாபா விட்டதை 2022ல் பிடித்துவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த ரீ ரிலீஸ் மூலம் தன்னுடைய ரசிகர்கள் யார் என்பதையும், அவர்களது பல்ஸ் என்ன என்பதையும் பிடித்து அதன் மூலம் இனி வரும் காலங்களில் அவரது முடிவுகள் இருக்கலாம் என்கின்றனர் திரை ஆர்வலர்கள். 

அதேசமயம், காந்தாரா இந்திய அளவில் வசூலை வாரிக்குவித்தாலும் தமிழ்நாட்டில் அதன் வசூல் சுமார்தான். மேலும், காந்தாரா குறிப்பிடத்தக்க விமர்சனங்களை காத்திரமாக பெற்றதும் தமிழ்நாட்டில்தான். ஆக, இதுபோன்ற பேண்டஸி கதைகளில் கொஞ்சம் லாஜிக்கும், ஐடியாலஜி சரியாக இருந்தாலும்தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது காந்தாரா படம் மூலம் நிரூபனம் ஆகியிருக்கிறது. எனவே காந்தாரா, பிரம்மாஸ்திரா போன்ற படங்களால் பாபாவை ரீ ரிலீஸ் செய்து; முன்னர் விட்டதை இப்போது பிடிக்கலாம் என்ற ரஜினியின் ஆசை நிறைவேறுமா என்ற முக்கியமான கேள்வியும் எழுகிறது.

Baba

இதற்கிடையே பாபா ரீ ரிலீஸுக்கு அரசியல் ரீதியாகவும் ஒரு காரணம் கூறப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. ரஜினியை எப்படியாவது அரசியலுக்குகொண்டுவந்து தங்கள் கொள்கை பிடிப்புள்ள ஒருவரின் கொடியை தமிழ்நாட்டில் பறக்கவிட வேண்டுமென்பது பாஜகவின் அஜெண்டா. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினி அரசியலுக்கு நிரந்தர மூடுவிழா நடத்திவிட்டார். இது பாஜகவுக்கு கடுமையான அப்செட்டை கொடுத்திருக்கிறது.

எனவே அந்த அப்செட்டை ஈடுகட்டும் வகையிலும், எப்போதும் வலதுசாரி சிந்தனை உடைய ரஜினி இப்போது பாபாவை ரீ ரிலீஸ் செய்து ஆன்மீகம் என்ற பாஜகவின் அஜெண்டாவை வளரும் தலைமுறைகளான 2K கிட்ஸுகளிடம் கொண்டு சேர்க்கலாம். அதேபோல் ஏற்கனவே பாபா படத்தில் அரசியல் ரீதியான காட்சிகளில் அரசியல்வாதிகளையும், ஆளுங்கட்சியையும் மறைமுகமாக சாடியிருப்பார் (அப்போது அதிமுக). தற்போதைய பாபாவிலும் அந்த காட்சிகள் இடம்பெறும்பட்சத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை சாடுவதாகவே கருதப்படும். அது பாஜகவுக்கு மறைமுகமாக உதவி செய்வதாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் பாபா ரீ ரிலீஸை பாஜகவும் ஆர்வத்தோடு எதிர்பார்ப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Rajini

எது எப்படியோ இந்த காரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ரஜினிக்கு பாபா என்பது ஒரு கனவு படம். முதல் முறை அந்த கனவுப் படத்தை வெளியிட்டபோது எல்லோரும் ரசிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவில்லை. அதற்கு காரணம் ரஜினியின் ஐடியாலஜி. தற்போதும் ரஜினி அந்த ஐடியாலஜியில் இருந்து மாறவில்லை. தமிழ்நாடு மக்களும் தங்களது ரசனையிலிருந்து மாறப்போவதில்லை. எனவே மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினிக்கு அவரது ஆசை இப்போதாவது நிறைவேறுமா?... பார்க்கலாம்.

மேலும் படிக்க | Game on..வெளியான உடனே சாதனைகளை அடித்து நொறுக்கிய அஜித்தின் "சில்லா சில்லா’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News