அவர் அடிச்ச 10 பேருமே டான்தான்...! - பீனிக்ஸ் மனிதர் விஜயகாந்த் பிறந்த நாள்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று. அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைத் தற்போது பார்க்கலாம்

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Aug 25, 2022, 02:45 PM IST
  • நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று.
  • சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தவர்
  • தூரத்து இடி முழக்கத்தில் கதாநாயகனானார்
அவர் அடிச்ச 10 பேருமே டான்தான்...! - பீனிக்ஸ் மனிதர் விஜயகாந்த் பிறந்த நாள்! title=

சினிமா வருகை!

புரட்சிக் கலைஞர், கேப்டன், கறுப்பு எம்.ஜி.ஆர் என பலவிதப் பெயர்களில் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த். வெற்றிகரமான நடிகர் மட்டுமல்லாது வெற்றிகரமான அரசியல்வாதி எனவும் பெயர் எடுத்த விஜயகாந்துக்கு இந்த இடம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. கிராமத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த பலருள் ஒருவர்தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் வில்லனாக சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்த விஜயகாந்த் தூரத்து இடி முழக்கம் எனும் படத்தில்தான் கதாநாயகனாக நடித்தார்.

சினிமாவில் சாதனை

அவர் நடித்த ஆரம்ப காலப் படங்கள் பெரிதாக எடுபடாத நிலையில் அவருக்கு முதல் ஹிட்டாக அமைந்தது விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை எனும் படம்தான். ஹீரோ வாய்ப்பு கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்த விஜயகாந்த் இப்படத்துக்குப் பின்னர் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி நடிகரானார். புரட்சிகர கருத்துக்களைப் பேசும் படங்கள், ஆக்‌ஷன், காதல், கிரைம் த்ரில்லர், சென்டிமென்ட் படங்கள் என கலந்துகட்டி நடித்துவந்த விஜயகாந்த் 1984ஆம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்தார். ஒருவர் தனது கரியரில் ஒட்டுமொத்தமாக 18 படங்கள் நடிப்பதே சாதனையாகப் பார்க்கப்படும் சினிமா உலகில் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து பிரம்மிக்க வைத்த விஜயகாந்த்தைப் பார்த்து கோலிவுட்டே மிரண்டது.

கேப்டன் ஆன கதை!

ஒருபுறம் கமல்ஹாசன் மறுபுறம் ரஜினி என்றிருந்த தமிழ் சினிமாவில் 3ஆவது இடத்தை விஜயகாந்துக்கு வழங்கினார்கள் தமிழக மக்கள். பல கிராம பகுதிகளில் விஜயகாந்த்தான் நம்பர் 2 என்று சொன்னால் அது மிகையில்லை.ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தின் 100ஆவது படமாக வெளியாகி அதிரி புதிரி வெற்றியைப் பெற்ற இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது. காரணம்- இப்படத்திலிருந்துதான் அவரை கேப்டன் என அவரது ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். 

அரசியல் வருகை!

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது. அதற்கு விஜயகாந்தும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை துணிச்சலாக ஆரம்பித்தார் விஜயகாந்த். அவரது சினிமா கரியரைப்போலவே அரசியலிலும் அவருக்கான தொடக்கம் பெரிதாக அமையவில்லை. முதல் தேர்தலில் அவர் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். ஆனால் அதற்கு அடுத்த தேர்தலிலேயே சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக உருவெடுக்கும் அளவுக்கு வலிமையான தலைவராகவும் மக்கள் செல்வாக்குள்ளவராகவும் மாறினார் விஜயகாந்த். பின்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சினிமாவிலும் அரசியலிலும் தன்னை நேரடியாக பெரிதாக ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருந்துவருகிறார்.

விஜயகாந்த் எனும் அன்னதானக்கூடம்!

அரசியல் ரீதியாக விஜயகாந்த்மீது சிலருக்கு விமர்சனம் இருக்கலாம் ஆனால் விஜயகாந்த் எனும் தனி மனிதர்மீது யாருக்கும் வெறுப்பு இருக்க முடியாது எனச் சொல்லும் அளவுக்கு தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார் விஜயகாந்த். ஒரு காலத்தில் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த பலருக்கு விஜயகாந்தின் அலுவலகம்தான் அன்னதானக் கூடம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உணவளிப்பதைத் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டவர் விஜயகாந்த். அவர் கையால் சாப்பிட்ட பலர் அந்த ஈரம் காயாமல் இன்னும் அதை  நன்றியுடன் எடுத்துரைப்பதே அதற்கான சாட்சி.

அவர் நடித்த சத்ரியன் படத்தில் நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும் என்றொரு புகழ்பெற்ற வசனம் ஒன்று உண்டு. அதேபோல, அவர் பழைய விஜயகாந்தா வரணும் என்பதே தற்போது பலரது விருப்பமாக உள்ளது.

மேலும் படிக்க |  விஜய் நடிக்கப்போகும் அடுத்த 4 படங்கள் என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News