தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, பொங்கல் பானையில் பொங்கல் செய்ய வேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.