கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.
1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கார்கில் போர் வரலாறு:-
இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். இந்த நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்த கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றன.
கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது. இந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.
1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிராத தாக்குதல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுக்கு வேட்டு வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவானது. இந்த பதட்டத்தை தவிர்க்கவும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியாக தீர்த்து கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.
முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன. இந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர்.
மாடு மேய்ப்பவர்கள்தான் முதலில் இந்த ஊடுருவலை இந்திய ராணுவத்தின் பார்வைக்கு கொண்டு வந்தனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உஷார் அடைந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.
அப்போதும் இது தீவிரவாதிகள் செயலாகத்தான் இருக்கும் என்று தான் நமது ராணுவம் நினைத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.
தாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு வீரர்கள் தயாரானார்கள். தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
முதலில் ஸ்ரீநகர் – லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடினார்கள். இந்த போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலை முகடுகளின் உச்சியில் இருந்து பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழையையும், துப்பாக்கி குண்டுகளையும் கீழே இருந்து சந்தித்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள். சாலை முழுவதும் குண்டு வீச்சில் சேதம் அடைந்து கிடந்தது. வழி நெடுக கண்ணி வெடிகளும் மிரட்டியது. அவற்றை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினார்கள்.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் பாகிஸ்தான் படைகளை பல முனைகளில் புகுந்து தாக்கி துவம்சம் செய்து இருப்பார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள்.
முன்னேறிய ராணுவத்துக்கு வலுசேர்க்க விமானப் படை விமானங்களும் குண்டுகளை வீசியது. ஆனால் உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே பனி மூட்டத்தில் விமானங்களை செலுத்துவது கடினமாக இருந்தது. இந்த போரில் இந்தியா 3 விமானங்களை இழந்தது. மிக் 27 மிக்–21 ஆகிய இரு விமானங்களை இந்தியா இழந்தது. விமானப்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் சிறை பிடித்தது. எம்.ஐ.17 என்ற விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் விமானத்தில் இருந்த 4 வீரர்கள் பலியானார்கள். போர் உக்கிரமானதே தவிர முடிவுக்கு வரவில்லை. முற்றிலும் மலை மீது நடந்த மாறுபட்ட போர்.
இந்திய கடற்படையினர் போரின் போக்கை மாற்றினர். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது இந்திய கடற்படை. ஒரு புறம் பெருளாதார சிக்கல். இன்னொரு புறத்தில் போர். நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது.
இந்திய தரப்பு நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உடனடியாக கார்கிலில் இருந்து படைகளை வாபஸ் பெறும்படி எச்சரித்தது. இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ்ஷெரீப் வெளியிட்டார். பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தது. அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
போர் முடிவுக்கு வந்ததாக ஜூலை 26–ம் தேதி இந்திய தேசம் உலகுக்கு அறிவித்தது. இந்த போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். முதலில் 357 வீரர்களை தான் இழந்தோம் என தெரிவித்த பாகிஸ்தான் பிற்காலத்தில் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையை ஒத்துக் கொண்டார் நவாஸ்ஷெரீப்பே.
இந்நிலையில் இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.