மளிவு விலை விமான சேவை அளித்து வரும் Spice Jet நிறுவனம் மும்பை - ஜெத்தா(சவுதி அரேபியா)-மும்பை வழித்தடத்தில் நேரடி (ம) தினசரி விமான சேவையினை துவங்கவுள்ளது!
JetAirways நிறுவனம் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் தங்களது விமானத்தை எப்படி இயக்குவது என தெரியாமல் விழித்து வருகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமலும் நிறுத்தி விட்டது.
போதிய நிதி இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத ஊதியத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.
சுமார் 8,000 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10,000 கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது. இதற்கிடையில் JetAirways நிறுவனம் கடந்த ஏப்ரல் 17-ஆம் நாள் முதல் தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
Jet Airways முடக்கதால் தற்போது விமான போக்குவரத்து சேவைக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ள இந்தியாவில், விமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் Spice Jet கடந்த மாதம் 28 புதிய விமானங்களை களமிறக்கியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு விமான சேவையினை இன்று துவங்கியுள்ளது.
மும்பை - ஜெத்தா(சவுதி அரேபியா)-மும்பை வழித்தடத்தில் தினசரி இயங்கும் வகையில் நேரடி விமான சேவையினை Spice Jet நிறுவனம் துவங்கியுள்ளது. Spice Jet நிறுவன அறிவிப்பின் படி இந்த விமான சேவையானது வரும் ஜூலை 5-ஆம் நாள் முதல் நடைமுறை படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.