பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது அவதூறு வழக்கு பதிவு!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் பத்து நாள்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பிஜேபி காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகிறது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு பாஜக வெற்றிப்பெற வேண்டும் என்பதுக்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் தங்கியிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். பா.ஜனதாவிற்கு எதிராக குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேக்வானியும் பிரசாரம் செய்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜும் பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஜிக்னேஷ் மேக்வானியை கர்நாடகாவில் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது என பா.ஜனதா முதலில் இருந்தே புகார் தெரிவித்து வந்தது. இப்போது, பிரதமர் மோடியை ‘கார்பரேட் சேல்ஸ்மேன்’ மற்றும் திருடன் எனவும் அழைக்கிறார்கள் என பா.ஜனதா இருவருக்கும் எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்து உள்ளது.தேர்தல் ஆணையத்திற்கு மாநில பா.ஜனதா எழுதி உள்ள புகார் கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளது:- “பெங்களூருவில் 29-ம் தேதி ஜிக்னேஷ் மேக்வானி பிரசாரம் செய்த போது பிரதமர் மோடியை ‘கார்பரேட் சேல்ஸ்மேன்’ நாட்டை கொள்ளையடிக்கும் திருடன் என அழைத்தார்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பாவிற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் மேத்வானியும், பிரகாஷ் ராஜும் பேசிவருகிறார்கள் என பாரதீய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் எந்தவகையிலும் பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்க கூடாது எனவும் தேர்தல் ஆணையத்திடம் பாரதீய ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது.