உன்னாவ் பாலியல் பலாத்கார பலியான இளம்பெண், லக்னெள மருத்துவமனையில் இருந்து டெல்லி AIIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்!
சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உன்னாவ் பெண்ணை லக்னௌவில் இருந்து AIIMS கொண்டு வந்து சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் தற்போது பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் டெல்லி AIIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் இளம்பெண்ணின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் விமானம் மூலம் புது டெல்லி கொண்டு வந்து AIIMS மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்த பெண் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேவேளையில் அவரது வழக்குரைஞரும் லக்னெளவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில்., அப்பெண்ணுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் மூலம் அவர் சுவாசித்து வருகிறார். அவரது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. வழக்குரைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவரும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக MLA குல்தீப் சிங் செங்கர், சாசி சிங் இருவரும் டெல்லி திஹார் சிறைக்கு நேற்றைய தினம் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.