லஷ்கர் அமைப்பின் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

Last Updated : Aug 1, 2017, 10:26 AM IST
லஷ்கர் அமைப்பின் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி அபு துஜனா சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டார் பகுதியில் இருக்கும் டர்னா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியுள்ள கட்டிடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அனைவரும் சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால், பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர், இதனையடுத்து, பதிலடி நடவடிக்கையாக தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் அபு துஜனா என்று தெரியவந்துள்ளது. 27 வயதாகும் அபு துஜனா பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர். தலைமறைவாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி. அபு துஜனாவை பாதுகாப்பு படையினர் தேடி வந்த நிலையில் பாராமுல்லாவில் பதுங்கியிருந்த போது என்கவுண்டரில் கொல்லப்பட்டான். இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள தாஹப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்றிரவில் இருந்து தாஹப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் இன்று அதிகாலை தீவிரவாதிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதனால், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News