புதுடெல்லி: நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை, ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக்கூறியதை அடுத்து, இன்று மீண்டும் விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் வந்தது.
இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தத்தோடு தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு கூறினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் சூழலில் உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மீண்டும் ப.சிதம்பரம் தரப்பினர் நீதிபதி ரமணாவிடம் முறையிட்டனர். அப்பொழுது நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு தெரிவித்தார். மேலும் ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடத்த முடியாது. ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பிறகே விசாரிக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறினார்.
நீதிபதி ரமணா கருத்தை அடுத்து, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்து காத்திருந்தது. அயோத்தி வழக்கை குறித்து இன்றைய விசாரணை முடிந்ததை அடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கலைந்து சென்றது. இதனால் தலைமை நீதிபதியிடம் இன்று ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கமுடியவில்லை. இதன்மூலம் ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடைபெறாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை, இந்த மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.