Manipur Violence Updates: மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து, அப்படியே சாலையில் நடக்க வைத்த கும்பல், அவர்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்த அதே நாளில் (மே 4ஆம் தேதி) வேறு 2 இளம்பெண்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இரு இளம் பெண்கள், இன கலவரத்தின் மத்தியில் கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டனர் என்று காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்படுகிறது.
கார் சுத்தம் செய்யும் பணியில் இருந்து பெண்கள்
பாதிக்கப்பட்டவர்கள் இரு பெண்கள், 21 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் கூறப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, சாலையில் நடக்கவைத்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கொனுங் மாமாங் பகுதியில் இந்த இரு இளம்பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் அதே பகுதியில் கார் சுத்தம் செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. மே 4ஆம் தேதி அன்று ஒரு கும்பலால் அவர்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் குடும்பம் கூறியுள்ளது.
ஆண்களை ஊக்கப்படுத்திய பெண்கள்!
கார் கழுவும் இடத்தில் இருந்த இரண்டு பெண்களையும், சில பெண்களுடன் சேர்ந்து ஒரு பெரிய ஆண்கள் குழு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு ஆண் சக ஊழியர், ஊடகத்திடம் கூறுகையில், அந்த வன்முறை கும்பலில் உள்ள பெண்கள், பாதிக்கப்பட்டவர்களை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும்படி ஆண்களை ஊக்கப்படுத்தினர் என்றார்.
கொடூர தாக்குதல்
பாதிக்கப்பட்டவர்கள் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர், விளக்குகள் அணைக்கப்பட்டு, அவர்கள் அலறும் சத்தம் வெளியே கேட்காமால் இருக்க துணிகளால் அவர் வாயை அடைத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கொடூரமான தாக்குதலுக்கு ஆளான பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள ஒரு மரத்தூள் ஆலைக்கு அருகில் வீசப்பட்டனர். அவர்களின் ஆடைகள் கிழிந்தெறியப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டது, அவர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கின என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | நாட்டையே உலுக்கிய மணிப்பூர் சம்பவம்... 19 வயதான ஐந்தாவது குற்றவாளி கைது!
மே 16இல் FIR
பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புடைய களங்கம் குறித்த பயம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் ஆரம்பத்தில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார், மே 16ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்ய துணிந்துள்ளார் என கூறப்படுகிறது.
அவரது மகளும் மற்றொரு பெண்ணும் "பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்" என்று அந்த எஃப்ஐஆர்-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொரொம்பட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
"அவர்களின் இறந்த உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை, மேலும் அவர்கள் இருக்கும் இடம் இன்றுவரை தெரியவில்லை," என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை சுமார் 100-200 ஆக இருந்தது என கூறப்படுகிறது.
இதே காவல்நிலையத்தில் தான், இரு பெண்களின் கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீதான கொடூரமான தாக்குதல் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை கிளப்பியிருக்கிறது.
பதற்ற நிலையில் மணிப்பூர்
இந்த இரு இளம்பெண்கள் பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஆயுதக் கொள்ளை, தீ வைப்பு, கொலைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான புகார்களை மணிப்பூர் போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு ஆர்வலர்கள் மற்றும் வட அமெரிக்க மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் ஆகியவற்றின் புகாரில் இந்த சம்பவங்கள் தேசிய மகளிர் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளன.
மே 3 அன்று வன்முறை வெடித்ததில் இருந்து குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்களும் மணிப்பூரில் இருந்து வெளிவருகிறது. மியான்மரின் எல்லையில் உள்ள மணிப்பூர், குகி பழங்குடியினர் குழுவானது பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான மெய்டீஸ் உடன், பழங்குடியினருக்கு வழங்கப்படும் பொருளாதார நன்மைகள் மற்றும் இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் தொடங்கியது.
32 லட்சம் மக்கள் வசிக்கும் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான துணை ராணுவம் மற்றும் இராணுவத் துருப்புக்களை மத்திய அரசு விரைந்த பிறகு பிரச்சனை தணிந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆங்காங்கே வன்முறை மற்றும் கொலைகள் விரைவில் மீண்டும் தொடங்கி மாநிலம் பதற்ற நிலையிலேயே உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ