டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெலுங்கானா சிறப்புத் தூதர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ளது!
கடந்த வாரம் வியாழக்கிழமை (பிப்., 14) ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சார்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகிய இரு வீரர்கள் உட்பட 44 CRPF வீரர்கள் பலி ஆனார்கள். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்தியாவின் மகள், பாகிஸ்தானின் மருமளுமான சானியா மிர்சா எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என சமூகவலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சானியா ட்விட்டரில் அளித்த விளக்கத்தில், உங்கள் வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் நான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. மொட்டை மாடியில் வந்து நின்று கத்த வேண்டிய அவசியமும் இல்லை. நான் என் நாட்டுக்காக விளையாடுகிறேன். அதற்காக வியர்வை சிந்துகிறேன். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். தற்போது அமைதிக்காக நான் பிரார்த் தனை செய்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியாயின. தெலங்கானா மாநில விளம்பர தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு அந்த அரசு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்நிலையில் அம்மாநில பாஜ எம்எல்ஏ ராஜா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறும்போது, புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் தனது பிறந்த நாளை கொண்டாட வேண் டாம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து மாநில அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.