பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றிலிருந்து 110 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 2 வயது குழந்தை பரிதாபமாக பலியானது!
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், பகவான்புரம் பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை கடந்த வியாழக்கிழமை மாலை வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. துணியால் மூடப்பட்டு கிடந்த அந்த ஆழ்துளை கிணற்றின் மீது குழந்தை கால் வைத்தபோது உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. அருகில் நின்றிருந்த குழந்தையின் தாய் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றுள்ளார் எனினும் இயலவில்லை.
இதையடுத்து காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 125 அடியில் குழந்தை சிக்கியிருந்தது. இதனால் குழந்தைக்கு முதலில் தேவையான ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து அந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 110 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் இன்று காலையில் குழந்தையை மீட்டனர்.
மீட்ட போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததால், தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
Very sad to hear about the tragic death of young Fatehveer. I pray that Waheguru grants his family the strength to bear this huge loss. Have sought reports from all DCs regarding any open bore well so that such terrible accidents can be prevented in the future.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) June 11, 2019
இதற்கிடையில் குழந்தையை மீட்க காலதாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்தி அம்மாநில முதல்வர் அமரேந்திர சிங் தெரிவிக்கையில்., ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற கோரமான சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், திறந்தவெளி போர்வெல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடன் அறிக்கை கேட்டிருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.