புது டெல்லி: மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் (17வது மக்களவை) இன்று தொடங்கியது. அப்பொழுது 542 எம்.பி-க்களும் பதவி ஏற்றுக்கொண்டார்.
நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டும் தனித்து வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலும் வென்றன. மற்ற கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால் மக்களவையில் 10 சதவீத இடங்களை காங்கிரஸ் வெல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. அதாவது குறைந்தது 55 இடங்களில் காங்கிரஸ் கட்சி தனித்து வென்றிருக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்படும் அமேதி தொகுதியிலும், முதல் முறையாக தென்னிந்தியாவின் கேராள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் மக்களவை தேர்தலில் அமேதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை, பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். வயநாடு தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிராமணம் செய்து வைத்தார். வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வயநாடு மக்களவை தொகுதி எம்.பி-யாக பதவியேற்றுக் கொண்டார். இதுக்குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், "தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்கினேன். எம்.பியாக இன்று பிற்பகல் பதவியேற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்."