தனது 50-வது மான் கி பாத் நிகழ்சியில் உரையாற்றி பிரதமர் மோடி ‘மோடி வருவார் போவார்... ஆனால் நாட்டின் கலாச்சாரம் நிலையானது’ என தெரிவித்துள்ளார்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 50-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது "அனைவரும் இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கான யோசனை என்னுள் எப்படி தோன்றியது என கேட்டனர். இப்போது அந்த காரணத்தை தெரிவிக்கிறேன்.
1998-ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தேன். அப்போது கடுமையான குளிரில் மாலை வேளையில் நான் ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டேன். அப்போது ஒரு கடையில் தேனீர் குடிக்க நின்றேன், அந்த கடையில் ஒருவர் மட்டும் தான் இருந்தார். நான் உள்ளே சென்றதும் எனக்கு லட்டு கொடுத்து சாப்பிடும் படி தெரிவித்தார். நான் என்ன விசேஷம் என்று கேட்டேன். அவர் ரேடியோவை ஆன் செய்தார்.
அன்று இந்தியா முதல் முறையாக அணு ஆயுத சோதனையை செய்திருந்தது. அந்த செய்தியை ரேடியோவில் கூறிக்கொண்டு இருந்தனர். அப்போது தான் நாட்டின் ஒரு சின்ன பகுதியில் இருக்கும் ஒருவர் தனது அன்றாட வேலைகளை பார்த்துக்கொண்டே எப்படி அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்வதற்கு ரேடியோ உதவுகிறது என்பதை உணர்ந்தேன்.
மன் கி பாத் தொடங்கப்பட்ட போது இது அரசியலின் ஒரு அங்கமாக இருக்ககூடாது என முடிவு செய்தேன். அதன்படி அரசின் செயல்பாடுகள் குறித்து எந்த தகவல்க் இடம்பெறக்கூடாது, மன் கி பாத் முழுமையாக மக்களுக்கானது என்பதில் தெளிவாக இருந்தேன்.
மோடி வருவார் போவார்... ஆனால் நாட்டின் கலாச்சாரம் நிலையானது. மன் கி பாத் நிகழ்ச்சியை ஒவ்வொரு முறையும் ஒலிப்பரப்பும் ஊடகங்களுக்கு நன்றி. பெரிதாக கனவு காணுங்கள், இது புதிய இந்தியா.
இளைஞர்கள் ஒரே நேரத்தில் பலவற்றை செய்ய வேண்டுமென்று நினைப்பதாக பலர் கூறுகின்றனர். அதில் என்ன தவறு உள்ளது, அவர்கள் அதில் சிறந்தவர்களாக இருக்கின்றனர், விரும்புவதை செய்யட்டும் என்று நான் கூறுவேன்.
தூய்மை, சாலை பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத இந்தியா, மகளுடன் செல்பி என பல விழிப்புணர்வு முயற்சிகளை கையாண்டு வருகிறோம். நான் ஒவ்வொரு முறையும் இளைஞர்களின் சாதனையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன். நான் இளைஞர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்