காஷ்மீரில் பிரதமர் மோடி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல் பயணம்

PM Naredra Modi Kashmir Visit: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடகர் இம்ரான் அஜீஸ், காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2024, 09:16 AM IST
  • பிரதமர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள்.
  • பக்ஷி மைதானத்தில் பிரதமர் உரை.
  • பிரதமர் வருகைக்கான பிரத்யேக பாடல்.
காஷ்மீரில் பிரதமர் மோடி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல் பயணம் title=

PM Naredra Modi Kashmir Visit: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் செல்கிறார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு (Article 370) ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றுப்பயனத்தில் அவர் ஸ்ரீநகர் பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெறும் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில், விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்பிலான ‘முழுமையான விவசாய மேம்பாட்டுத் திட்டத்தை’ அவர் ஸ்ரீநகர் மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள ‘ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி’ உட்பட சுற்றுலாத் துறையில் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

இது தவிர, சுற்றுலாவில் தேசத்தின் துடிப்பை அடையாளம் காணும் முதல் நாடு தழுவிய முன்முயற்சி உட்பட இன்னும் பல பணித்திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார். இதுமட்டுமின்றி வரலாற்று சிறப்புமிக்க பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெறும் பேரணியில் பிரதமர் உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடியின் பேரணியையொட்டி காஷ்மீரின் இந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தால் ஏரி முதல் அனைத்து பகுதிகளிலும் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில், பிரதமர் மோடி 2015 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பேரணிகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமரின் (PM Narendra Modi) வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்புக்காக ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பஷி மைதானத்தைச் சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பாதுகாப்புப் படையினரின் கால் ரோந்துப்பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பயணம் செய்யவுள்ள வழித்தடத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த முக்கிய நிகழ்வு பாதுகாப்பாகாவும் சுமுகமாகவும் நடந்துமுடிவதை உறுதி செய்வதற்காக வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | பரிட்சையை மாணவர்கள் மறக்கலாம் ஆனா தேர்வை நடத்தும் பல்கலைக்கழகம் மறக்கலாமா?

பக்ஷி மைதானத்தில் பிரதமர் உரை

பக்ஷி மைதானத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இன்று மதியம் 12 மணியளவில் பிரதமர் பக்ஷி மைதானத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பிறகு, அங்கு அவர் 'விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியில் பங்கேற்பார். சுமார் 2 லட்சம் பேர் கூடும் திறந்தவெளி பேரணியில் அவர் உரையாற்றுவார். பாரதீய ஜனதா கட்சி ஜம்மு காஷ்மீர் பிரிவின் அனைத்துத் தலைவர்களும், தொண்டர்களும் கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பிரமாண்ட வரவேற்புக்காக அவர்கள் ஸ்ரீநகர் நகரத்தையும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் அலங்கரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் வருகைக்கான பிரத்யேக பாடல்

பிரதமர் மோடியின் வருகை காஷ்மீர் மக்களை மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடகர் இம்ரான் அஜீஸ், காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த மூன்று நிமிட பாடல், 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது முதல், பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுமையடைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறுவது பற்றியும் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காஷ்மீர் பயணத்தின் போது பிரதமர் தொடங்கிவைக்கவுள்ள சில முக்கிய வளர்ச்சித் திட்டங்கள்:

- ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த மேம்பாடு
- சோனாமார்க்கில் உள்ள ஸ்கை டிராக் லிப்ட் 
- ஜம்மு காஷ்மீரில் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்த சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்
- இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2000 கிசான் கித்மத் கர் நிறுவப்படும். 
- சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1400 கோடி மதிப்பிலான 52 சுற்றுலாத் துறை திட்டங்கள்
- ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு ஆட்சேர்ப்புகளுக்கான பணி நியமன ஆணைகளையும் பிரதமர் விநியோகிப்பார்.

மேலும் படிக்க | “அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க..” புதுச்சேரி சிறுமிக்காக கொதிக்கும் பிரபலங்கள்! என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News