நாடு முழுவதும் நகரம், கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ‘சௌபாக்யா ’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
ரூ.16,320 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 2018, டிசம்பருக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா சௌபாக்யா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் பேசியது:-
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும், 4 கோடி குடும்பத்தினர் மின்சாரமின்றி இருளில் வாழ்கின்றனர். மின்சாரம் இல்லாத வாழ்க்கையின் இன்னலை புரிந்து கொண்டதால், மின்சாரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிந்துள்ளோம்.
மின்சாரம் கிடைக்கும் போதுதான், ஏழைகளின் வாழ்வு மேம்படுகிறது. இந்த அரசு அனைத்து வீடுகளுக்கும் மின்சாரத்தை வழங்கும். அதற்காக ரூ.,16,320 கோடியில் சவ்பாக்யா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், மின்சார கட்டண சுமையை ஏழைகள் மீது சுமத்த இந்த அரசு விரும்பவில்லை. நகரம், கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து ஏழைகளுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்.
மின்பற்றாக்குறை கொண்ட நாடான இந்தியாவை மின்மிகை நாடாக மாற்றுவதே எங்கள் இலக்கு. இதற்காக இந்த அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு எல்இடி விளக்குகள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்தது. இதன் மூலம், வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் எல்இடி விளக்குகளால் ஆண்டுக்கு ரூ.13,700 கோடி மிச்சமாகிறது. கடந்த பிப்ரவரி 2014ல் ரூ.310 ஆக இருந்த எல்இடி விளக்குகளின் விலை தற்போது ரூ.40 ஆக குறைந்துள்ளது.
2018 டிசம்பருக்குள் இந்தியாவின் அனைத்து வீடுகளும் மின்சார வசதியை பெற்றிருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.