ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுதல் தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை தேசிய பாதுகாப்பு குழுவின் (NSC) இரண்டாவது அமர்வை கூட்டினார்!
இந்திய அரசாங்கத்தின் முடிவிற்குப் பிறகு பதிலளிக்கும் உத்தி குறித்து விவாதித்து முடிவெடுக்க, ஒரு வாரத்திற்குள் இதுபோன்ற இரண்டாவது அமர்வில், உயர்மட்ட சிவில்-இராணுவ அதிகாரிகள் கூடியுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயன்று தேசிய சட்டமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய கான், புல்வாமா போன்ற தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதை உறுதிபடுத்தும், மேலும் இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தார்.
"இது நடக்கும் என்று நான் ஏற்கனவே கணித்திருந்தேன், மீண்டும் அவர்கள் நம் மீது பழியை வைக்க முயற்சிப்பார்கள், மீண்டும் எங்களை தாக்கக்கூடும், நாம் மீண்டும் எதிர்த்து போராடுவோம்" என இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., "அப்படியானால் என்ன நடக்கும்? அவர்கள் நம்மைத் தாக்குவார்கள், நாம் பதிலுக்கு தாக்குவோம். போர் இரு வழிகளிலும் துவங்கும்... நம் இரத்தத்தின் கடைசி துளியைக் கொட்டும் வரை நாம் போராடுவோம். அந்தப் போரில் யார் வெல்வார்கள்?... யாரும் வெல்ல மாட்டார்கள். இது மொத்த உலகிற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். " என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட நிலை, பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்களுக்கு வரும் காலம் தூரம் இல்லை என குறிப்பிட்டு பேசிய இம்ரான், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்திய "நிர்வாக காஷ்மீர் மக்களுக்காக" குரல் எழுப்புமாறு உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.