கடந்த 1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்த நிலையில், நமது ராணுவ வீரர்கள் அதனை போராடி முறியடித்தனர். பாகிஸ்தானை கார்கில் யுத்தத்தில் வீழ்த்தியதை முன்னிட்டு ஜூலை 26ம் தேதி ஆண்டு தோறும் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. கார்கில் வெற்றி தினத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியா தனது மரியாதையையும் கண்ணியத்தையும் தக்க வைத்துக் கொள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) கடக்கத் தயாராக உள்ளது என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் ராணுவ வீரர்களுக்கு ஆதரவளிக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
ரஷ்யா-உக்ரைன் போரை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, போரிலும் பங்கேற்பதால் ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது என்றார். கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய் திவாஸ்) இன்று நாட்டின் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர். மேலும், திராஸ் போர் நினைவிடத்தின் மீது போர் விமானங்கள் பறந்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தின. பிரதமர் மோடி தமது ட்விட்ட ர் பக்கத்தில் கார்கில் போர் மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு மே 3ம்தேதி துவங்கிய இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கார்கில் யுத்தம் ஜூலை 26-ந் தேதி வரை நீடித்தது. ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், கார்கில் யுத்தத்தில் 527 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். போரில் 1363 ராணுவ வீரர்கள் இந்த யுத்தத்தில் படுகாயமடைந்தனர். கார்கில் பகுதியை கைப்பற்ற முயற்சித்த பாகிஸ்தான் ராணுவத்தின் 700 பேர் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டு மாவீரர் மேஜர் சரவணன் உள்ளிட்ட வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசம் பல விருதுகளை வழங்கி சிறப்பித்தது.
கார்கில் விஜய் திவாஸ் தினமான இன்று, வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இரவு பகலாக நாட்டின் எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.கார்கில் வெற்றி தினம் தேசத்தின் இறையாண்மையைக் காக்க நித்திய விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையின் அவசியத்தை நினைவூட்டுவதாகவும் உள்ளது. சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அமைதி, கவுரவம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான ஆயுதப்படைகள் மற்றும் இந்திய குடிமக்களின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ