ஹிங்கோலி: சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் ஒரு நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வேதனையான சம்பவம் மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உள்ள கோரேகானில் பகுதியில் நடந்துள்ளது. 25 வயதான மராத்தி நடிகை பூஜா ஜுஞ்சருடன், அவரது குழந்தை இறந்துள்ளது.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி, கர்ப்பமாக இருந்த நடிகை பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள கோரேகான் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மதியம் சுமார் 2 மணிக்கு ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அந்த குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டது. மயக்க நிலையில் இருந்த பூஜாவை, 40 கி.மீ தூரத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து பூஜாவின் கணவர் விஷ்ணு ஸ்ஞ்சார் அவசர உதவி எண் 108-ஐ அழைத்து ஆம்புலன்ஸ் கேட்டார். ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. பின்னர் 102-ஐ அழைத்து ஒரு சிறிய ஆம்புலன்ஸ் கேட்டார். அங்கும் அவருக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், பூஜாவின் உடல்நலக்குறைவு மோசமடைவதை பார்த்த குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் கிடைக்காத பட்சத்தில், அவரை ஹிங்கோலி மாவட்ட மருத்துவமனையில் அழைத்துச் செல்ல தனியார் வாகனத்தை புக் செய்து கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூஜா மரணமடைந்தார்.
இதுக்குறித்து பூஜாவின் கணவர் விஷ்ணு ஜுஞ்சர் கூறுகையில், "என் மனைவி பூஜா பிரசவிக்கப்பட்டார். பிரசவத்திற்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்தபோது, அவரை ஹிங்கோல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர் கூறினார். ஆனால் கோரேகான் சுகாதார மையத்தின் தலைமை மருத்துவர் பணிக்கு வரவில்லை. சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இவை இரண்டும் சரியாக தங்கள் பணிகள் செய்திருந்தால் பூஜாவின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என வேதனையுடன் கூறினார்.
பூஜா இரண்டு மராத்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். கர்ப்பம் காரணமாக, அவர் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.